நாட்டின் அறபுக் கல்லூரிகளிலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்

கொவிட் 19 அச்சுறுத்தலுக்குப் பின்னர் நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதைப் போல அனைத்து மதங்களுக்குமான அறநெறி பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக நாடு கொரோனா அச்சத்திலிருந்து விடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாடசாலைகளும்,மார்க்க கல்வி நிறுவனங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

நாட்டிலுள்ள அறபுக் கல்லூரிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அந்தந்த கல்லூரிகளின் நிர்வாகத்தினர் அரசுடன் வேண்டிக் கொண்டதற்கமைவாக தற்போது நாட்டிலுள்ள அறபுக் கல்லூரிகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. 'பாதுகாப்பைப் பேணியவாறு கொரோனாவுடன் வாழப் பழகுதல்' என்ற உலகத்தின் தற்போதைய நியதிக்கேற்ப கற்கை நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசு வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரையாக உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் மூடப்பட்டிருந்த அறபுக் கலாசாலைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அறபுக் கலாசாலை நிர்வாகத்தினர் வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையிலும், எந்த வகையிலேனும் அச்சமற்ற சூழலை உருவாக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு அமையவும் தற்போது அறபுக் கலாசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இக்காலகட்டத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அறபுக் கல்லூரிகளை இயக்குவது பொறுப்பு வாய்ந்த நிர்வாகிகளின் கடமையாகும்.

அறபுக் கல்லூரி மாணவர்கள் ஒன்றாக இஸ்லாமிய சம்பிரதாய முறைப்படி தமது உணவு உண்ணும் முறைகளை அமைத்துக் கொள்வது, கூட்டாக வழிபாடுகளில் ஈடுபடுவது என்பவை தவிர்க்க முடியாதவாறு நிகழும் சந்தர்ப்பங்களாகும். எனவே கொவிட்-19 விடயத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி அறபுக் கல்லாரிகள் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அரச பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டுக் கழகம் என்றும்,டெங்குவுக்கு எதிரான குழுக்கள் என்றும், சுற்றாடல் பாதுகாப்பு குழுக்கள் என்றும் அமைக்கப்பட்டு அதிபரின் மேற்பார்வையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர் பங்களிப்புடன் சுகாதார நடைமுறைகள் பேணப்படுகின்றன. அறபுக் கல்லூரிகளிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்ைக விடுக்கப்படுகின்றது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அறபுக் கல்லூரிகளில் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மறுஅறிவித்தல் வரும் வரையில் அந்தந்த பிரதேச மாணவர்கள் எவரும் தங்கியிருந்து கற்க முடியாதவாறு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்தளவான மாணவர்கள் தங்குவதற்குரிய இடமாக அறபுக் கல்லாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

கல்குடா தொகுதியில் உள்ள ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குள் அடங்கும் தியாவட்டவான் தாறுஸ் ஸலாம் அறபுக் கல்லூரி மீண்டும் கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளது.

இக்கல்லூரி சுமார் 4மாத காலமாக மூடப்பட்டிருந்தது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் வழங்கப்பட்ட நற்சான்றுப் பத்திரத்தின் உதவியுடனும்,பொலிஸ் மற்றும் படைவீரர்களின் ஆலோசனையின் பேரிலும் அவர்களது ஒத்துழைப்பினால் இந்தக் கலாசாலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அங்கு முதற் கட்டமாக க.பொ.த உயர்தர உலமா மாணவர்களும், சாதாரண தர வகுப்பு உலமா வகுப்பு மாணவர்களும் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலமா மாணவர்கள் கைகழுவுவதற்குரிய ஏற்பாடுகள் கலாசாலையில் செய்யப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கான தனிமைப்படுத்தும் அறைகளுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

யூ.எல்.எம்.ஹரீஸ்...?
(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...