மாற்றத்துக்காக வாக்களித்த எமது மக்களின் குறைகளை தீர்ப்பேன் | தினகரன்


மாற்றத்துக்காக வாக்களித்த எமது மக்களின் குறைகளை தீர்ப்பேன்

ஸ்ரீல.சு.க யாழில் வரலாற்று வெற்றி

தமிழ் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளார்கள். எனவே அம் மக்களின் ​தேவைகள், பிரச்சினைகள் தீர்த்து வைத்து அவர்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்கில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் போட்டியிட்ட லங்கா சுதந்திர கட்சி முதல் தடவையாக மக்களின் நேரடி வாக்களிப்பினால் ஓர் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொண்டுள்ளது.

குறிப்பாக கடந்த 60 வருட கால அரசியலில் லங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பினால் வெற்றியடையவில்லை. மாறாக தேசிய பட்டியல் மூலமே உறுப்பினரை பெற்றுக்கொண்டது.

அந்தவகையில் இம் முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் தடவையாகவும், அதேநேரம் அதிகூடிய விருப்பு வாக்கினாலும் லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவாகியுள்ளார்.

அந்தவகையில் 36,895 விருப்பு வாக்குகளினை பெற்று பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இதுவரை காலமும் அதிகூடிய விருப்பு வாக்கினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே பெற்றுவந்த நிலையில் இம் முறை அந்த வரலாறு மாற்றியெழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் வெற்றி தொடர்பாக அங்கஜன் இராமநாதனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் இம்முறை மாற்றத்துக்கான குரல் கொடுத்துள்ளார்கள். அதற்காக தான் இம்முறை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் முதல்தடவையாக யாழ்ப்பாணத்தில் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்கினை வழங்கியுள்ளார்கள்.

அந்தவகையில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடியவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இது மிகப் பெரிய மாற்றம். மிகப் பெரிய குரலை கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்களை முன்னேற்றி கொண்டு செல்ல ஏனைய கட்சிகளிலிருந்து வந்தவர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உரிமை தொடர்பாக அவர்கள் பெற்றுக்கொடுக்கட்டும். நாம் இம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து அவர்களை பொருளாதார ரீதியாக, அபிவிருத்தி ரீதியாக முன்னேற்றுவோம்.

நாங்கள் நடந்து முடிந்ததை தொடர்ந்து விமர்சிக்காமல், அந்த கட்சி இந்த கட்சி என்று பாராமல் மக்களின் மாற்றத்துக்காகவும் அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் உழைப்போம். அதற்கான குரலை தான் ஓங்கி ஒலித்திருக்கிறது என்றார்.

ரி.விரூஷன்


Add new comment

Or log in with...