நாட்டிற்கு நன்மையான ஒப்பந்தங்களில் மட்டுமே கைச்சாத்து; சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்பட புதிய அரசு தயார் | தினகரன்


நாட்டிற்கு நன்மையான ஒப்பந்தங்களில் மட்டுமே கைச்சாத்து; சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்பட புதிய அரசு தயார்

எதற்கும் அடிபணியோம்; 19ஆவது திருத்தத்தில் திருத்தம்

‘சௌபாக்கியத்தின் நோக்கு’ என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகத்தான வெற்றியை நாட்டு மக்கள் வழங்கியுள்ளதால் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படமாட்டாது. அதற்கான தேவையும் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

19ஆவது திருத்தச் சட்டத்தில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையாகவுள்ள அனைத்துக் காரணிகளும் திருத்தியமைக்கப்படும் என்பதுடன் பாராளுமன்றில் வலுவான ஓர் எதிர்க்கட்சி இல்லாமையால் பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும், அமைப்புக்கும் எமது அரசாங்கம் அடிப்பணிந்து செயற்பட மாட்டாதென்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மகத்தான வெற்றியை நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உட்பட எமது கட்சியினரே இதற்கு காரணம். நாட்டில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 19 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளோம்.

நாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அரைவாசி வாக்குகளைக் கூட எதிர்க்கட்சியால் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. ஐ.தே.க வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. எம்மால் தான் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியுமென ரணில் கூறியிருந்தார். ஆனால், ஐ.தே.கவுக்கு ஒரு ஆசனத்தைக்கூட வழங்காது மக்கள் அடியோடு நிராகரித்துவிட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் வழங்கிய பலமிக்க ஆணையாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. எதிர்கால எதிர்பார்ப்புகளைவிட கொரோனா ஒழிப்பு நடவடிக்கை முதல் கடந்த எட்டு மாதங்களில் ஜனாதிபதி தாம் யாரென செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளதாலேயே மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தேர்தல் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோன்று இந்த வெற்றியை நாம் பாரிய சவாலாகவும் எடுத்துக்கொள்கிறோம். காரணம், பாராளுமன்றத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாது போயுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலில் பலமான எதிர்க்கட்சியொன்று இருந்தால்தான் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அதனால் நாம் பாராளுமன்றக் குழுக்களை வலுப்படுத்த எண்ணியுள்ளோம். அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஓரளவு அந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும். எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அசைக்க முடியாத ஆணையை மக்கள் வழங்கியுள்ளதால் நாம் நினைத்ததை செய்ய மாட்டோம். அவ்வாறான அரசாங்கமல்ல எமது அரசாங்கம். மக்களின் கருத்துக்கும் ஏனையவர்களின் கருத்துகளுக்கும் செவிமெடுத்துத்தான் செயற்படுவோம்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான சந்தர்ப்பத்தில் அவரின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பாராளுமன்றமொன்று இருக்கவில்லை.

19ஆவது திருத்தச் சட்டத்தால் இந்த நிலைமை ஏற்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டம் இல்லாவிட்டால் கடந்த டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றிருக்கும்.

19ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய குறைப்பாடுகளுள்ளன. சுயாதீனக் குழுக்களின் செயற்பாடுகளிலும் பாரிய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன.

ஆகவே, 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படும் சிக்கல்களை திருத்தியமைக்க நடவடிக்கையெடுப்போம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் போதிய ஆணையை மக்கள் வழங்கியுள்ளதால் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தேவை எமக்கில்லை. தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படாது. ஈ.பி.டி.பி., சுகந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட எமது கூட்டணியின் கீழ் போட்டியிட்ட பல கட்சிகள் ஆசனங்களை பெற்றுள்ளன. அவை அனைத்தையும் சேர்க்கும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிட அதிகமான ஆணை எமக்குள்ளது.

எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் அமைப்புக்கும் நாம் அடிப்பணிந்து செயற்பட மாட்டோம். ஜனாதிபதி தமது பதவியேற்பு விழாவில் இதனை தெளிவாக வலிறுத்தியுள்ளார்.

 

 சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...