பிரதமர் 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகார பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்

13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறிய கருத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட பின்னர், நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

13வது திருத்தத்தை சீர்செய்வது, அல்லது மாற்றி அமைப்பது தொடர்பில் பிரதமர் மகிந்தராஜபக்ச பேசியிருந்தால், 13வது திருத்தம் எமது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பதில் தொடர்ச்சியாக உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால், அதில் செய்யப்பட்ட சில முன்னெடுப்புக்கள் அதை மாகாணத்தை அலகாக வைத்து அதிகாரத்தை பகிர்வு செய்யப்பட்டதும், மாகாணங்கள் இணையக்கூடிய வகையில் அங்கே, இடம் இருக்கிறதும், மிக முக்கியமான விடயம்.

ஆகையினால், 13ஆம் திருத்தத்திற்கும் அப்பால் சென்று, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என பிரதமர் மகிந்தராஜபக்ச இந்தியாவிற்கு எழுத்தில் மூன்று தடவை வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அந்த வாக்கை மீறுவதற்கு முயற்சி எடுக்கமாட்டார் என்பதற்கு அப்பால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் வேண்டும். அதை நாங்கள் வலிமையாக வலியுறுத்துவோம். 10 வருடத்திற்கு மேலாக, யுத்தம் நிறைவடைந்த பின்னர், தமிழ் தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து, யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பல நாடுகளின் உதவிகளைப் பெற்றிருந்த போதிலும், 10 வருடங்களின் பின்னரும் அதை செய்யாது இருப்பது, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறுகின்ற செயல், ஆகையினால், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதை செய்ய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

அதேநேரம், அரசாங்கத்துடன், இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இந்த அரசாங்கம் சாதாரண வெற்றியைப் பெற்றிருந்தாலே, வேறு யாருடனும் கூட்டு சேர்வதற்கான தேவை இருந்திருக்காது. அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கான தேவை அவர்களுக்குக் கிடையாது. ஆகவே, அந்த நிலமை ஏற்படாது என நினைக்கின்றேன் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...