மாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பரீட்சைகள் விடயத்தில் ஐயப்பாடுகள்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி ஒரே தடவையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. 

கொவிட்19 தொற்றுநோய் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கல்வியமைச்சு 2020.07.28இல் புதிய சுற்றுநிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளது. 

மேற்படி இரண்டு பக்க சுற்றுநிருபத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைக்கும் நடைமுறைவிதிகள், இடைவேளை எவ்வாறு அமைதல் வேண்டும், கல்விப் பணிக்குழுவினர் வகுப்பறை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்களின் கடமைகள், பரீட்சைகள் என்பன பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு ரீதியாக வார நாட்களில் எவ்வாறு மாணவர்களை வரவழைப்பது என்பது தொடர்பில் சில முக்கிய விடங்கள் சுற்றுநிருபத்திலிருந்து இங்கே தரப்படுகின்றன. பாடசாலை ஆரம்பமாகியதும் இடைவேளை எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றியும் அச்சுற்றுநிருபம் தெளிவாகக் கூறுகிறது. 

பி.ப. 1.30மணிக்கு முடிவடையும் வகுப்புகளுக்கு ஒரு இடைவேளை வழமை போன்று இடம்பெறும். ஆனால் பி.ப. 3.30மணிக்கு முடிவடையும் வகுப்பு மாணவர்க்கு இரண்டு இடைவேளைகள் அதுவும் 20நிமிடத்திற்கு மேற்படாத வண்ணம் வழங்கப்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும். கற்பித்தலுக்கு மேலதிகமாக மேற்பார்வை மதிப்பீடுகளை பரீட்சித்தல், சுகாதார மற்றும் ஒழுங்கு பேணல் கருமங்களிலும் பொறுப்புக்களை கையேற்க வேண்டும்.  பி.ப. 3.30மணி வரை நேரசூசி உள்ள ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்குமான கடமை நேரம் மு.ப. 7.30மணி தொடக்கம் பி.ப.1.30 மணி வரையுமாகும். 

கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வழமை போன்று கடமைக்காக சமுகமளிக்க வேண்டும். 

பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான முடிக்கப்படாத பரீட்சைகளைத் தவிர, தவணைப் பரீட்சைகளையோ வேறு பரீட்சைகளையோ நடத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பாடசாலை விளையாட்டுப் போட்டி, தமிழ்மொழித்தினப் போட்டி, ஆங்கிலதினப் போட்டி என பல புறக்கிருத்திய செயற்பாடுகள் பூரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான சுற்றுநிருபங்களும் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் காலை உடலியக்கச் செயற்பாடுகள் மட்டும் சமுகஇடைவெளியைப் பேணி திருப்தியாகக் காணப்படுமானால் அவற்றை முன்னெடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சம் தணிந்து, தேர்தல் அனைத்து அரசபாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. இக்கட்டத்தில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகிய முத்தரப்பினர் மத்தியில் பல கேள்விகள் இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியாது. 

மாணவர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் பாடசாலைக் கல்வியை முற்றாகவே இழந்துள்ளனர்.இணையவழிக் கல்வி எதிர்பார்த்த பலன் தரவில்லை. அதாவது வருடத்தின் அரைப் பகுதியை கொரோனா ஏப்பம் விட்டுள்ளது. அக்காலப் பகுதியில் மாணவர்கள் கற்றிருக்க வேண்டிய பாட அலகுகள் 50வீதமானதாகும். அவை இழக்கப்பட்ட கல்வியாகவே இருக்கப் போகின்றனவா? அல்லது அதனை எதிர்வரும் காலப் பகுதியில் மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதெல்லாம் சமகால வினாக்களாகும்.   பாடப் பரப்பை பூர்த்தி செய்யாமல் பொதுப்பரீட்சை நடத்துவதென்பது மேற்கூறப்பட்ட மூன்று தரப்பினரதும் மற்றுமொரு குழப்பமாகும். குறிப்பாக க.பொ.த உயர்தர மாணவர் மத்தியில் இது விடயம் பெரும் மனக்கிலேசத்தை உண்டு பண்ணியுள்ளது. 

பலதரப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 தொடக்கமும், புலமைப் பரிசில்பரீட்சை ஒக்டோபர் 11ஆம் திகதியும் நடைபெறுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலமைப் பரிசில்: 

கொரோனா காரணமாக தரம்5 மாணவர்கள் 4மாத கால கல்வியைப் பெறவில்லையென்பதால் பின்வரும் சலுகையை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.அதனை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார்.  வழமையாக முதலாம் பத்திரம் நுண்ணறிவை மையமாகக் கொண்டது. இது 45நிமிடங்களுக்கு நடைபெறுவது வழமை. இம்முறை அதனை மேலும் 15நிமிடங்களுக்கு நீடித்து 1மணி நேரமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இது கொரோனா கால சலுகையாகும்.  அதேபோன்று 2ஆம் பத்திரத்தில் கணிதம், தமிழ், சுற்றாடல்கல்வி என்பனவற்றை மையமாக வைத்து 60 வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 31ஆம் வினா தொடக்கம் 59ஆம் வினா வரையிலான பல்தேர்வு வினாக்களுக்கான தெரிவுகள் வழமையான 4 தெரிவுகளுக்குப் பதிலாக இம்முறை 3 தெரிவுகள் இடப்படும். 60ஆம் வினா படத்துடன்கூடிய விபரிப்பு வினாவாகும்.  அதுமட்டுமல்ல எந்தெந்த வகுப்புகளில், என்னென்ன பாடப்பரப்புகளில் வினாக்கள் எத்தனை வீதம் வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

எனவே தரம் 5 புலமைப்பரிசில்பரீட்சை பற்றிய அச்சம் அல்லது ஜயப்பாடு என்பனவற்றுக்கு மேற்கூறப்பட்ட விளக்கம் ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகிய 3 தரப்புகளுக்கும் நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. 

உயர்தரப் பரீட்சை:  

ஆனால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் நியாயமான தெளிவின்மை இன்னமும் நிலவுவதாகத் தெரிகிறது. கடந்த ஆறுமாத காலத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பாடஅலகுகள், பாடத்திட்டம், மீட்டல் நிறைவு செய்யப்படவில்லை. இந்நிலையில் பரீட்சையின் வினாக்கள் எப்படி, எந்தெந்த அலகுகளில் அமையும் என்பதில் பரவலாக மாணவர் ஆசிரியர் மத்தியில் தெளிவின்மை நிலவுகிறது.  விடுபட்ட பாட அலகுகளைத் தவிர்த்து பரீட்சையை நடத்தலாம் என்றும் கூறப்பட்டது. எனவே முக்கியமாக உயர்தரப்பரீட்சை எவ்வாறு அமையப் போகின்றது என கல்வி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

க.பொ.த. (சா.த) பரீட்சை:  

இவ்விரு பரீட்சைகளுக்கும் அப்பால் க.பொ.த சா.தரப்பரீட்சை வழமை போன்று டிசம்பரில் நடக்கும் என தெரிகிறது. ஆனால் குறித்த சாதாரண தர மாணவர்களும் கடந்த 6மாத கால கல்வியை இழந்துள்ளனர்.  எனவே அவர்களது இழந்த கல்வி மற்றும் பரீட்சை தொடர்பாக ஆராயப்பட வேண்டியது அவசியமானதொன்றாகுமென கல்விச் சமூகம் சுட்டிக் காட்டுகின்றது.  ஒக்டோபர் மாதம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதால் ஒக்டோபர் 09ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்தவணை விடுமுறை மீண்டும் க.பொ.த . சா.தர மாணவர்களை பாதிக்காதா? அவர்களுக்கான இழந்த கல்வியை மீட்பதில் இவ்விடுமுறை சாதகமாக அல்லது பாதகமாக செல்வாக்குச் செலுத்தக் கூடும். எனவே இக்காலகட்டத்தில் இவர்களைக் கையாள்தல் தொடர்பில் தெளிவான பார்வை இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே 6மாத காலம் இழந்த கல்வியை வருகின்ற ஒக்டோபர் தவிர்ந்த 3மாதத்திற்குள் மீட்பது எவ்வாறு ? க.பொ.த (சா.த) மாணவர்களின் பரீட்சையும் கேள்விக்குள்ளாகலாம். எனவே இவையெல்லாம் கல்வியமைச்சுக்கு குறிப்பாக அரசாங்கத்திற்குப் பெரும் சவாலான விடயமாகலாம்.  

மொத்தத்தில் பாடசாலைகள் பூரணமாக ஆரம்பமாகும் போது இத்தகைய வினாக்களுக்கு உரிய விளக்கங்களை உரிய தரப்பினர் வழங்க வேண்டும் என மேற்கூறப்பட்ட 3 தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 

எனவே இயற்கையோடு கூடிய பிச்சினைகளிலிருந்து மீள்வதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அர்ப்பணிப்புடன் தியாகத்தோடு முழுமூச்சுடன் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

வி.ரி.சகாதேவராஜா (A.D.E.) 

கல்வியியலாளர் 


Add new comment

Or log in with...