உலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்

உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும்  கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் பெருவீழ்ச்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, சுமுக வாக்களிப்புக்கான வாய்ப்பு மக்களுக்கு  பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நேற்று (05 ஆம் திகதி) நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் தோற்றம் பெற்ற பின்னர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய நாடுகளில் இலங்கை மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே தென்கொரியாவும், சிங்கப்பூரும் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. அதிலும் கொரோனா அச்சுறுத்தல் தோற்றம் பெற்ற பின்னர் தெற்காசியாவில் பொதுத்தேர்தலை நடத்திய முதலாவது நாடு என்ற பெருமையையையும் இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. 

2019 டிசம்பர் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்ற கொரோனா தொற்று குறுகிய காலப் பகுதியில் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அதேநேரம், கடந்த மார்ச் மாத நடுப் பகுதி முதல் இலங்கையிலும் இவ்வைரஸ் தொற்று பதிவாகத் தொடங்கியது. அதேகாலப் பகுதியில் இந்நாட்டின் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டிருந்ததோடு, தேர்தலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பதிவாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து அதன் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் முன்னுரிமை  அடிப்படையில் விரிவாக முன்னெடுக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து நாட்டை விடுப்பதைப் பிரதான இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தில், தங்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கான ஜனநாயக உரிமையை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக் கொடுப்பதும் ஒரு அங்கமாக விளங்கியது. 

இதன் பயனாக கொரோனா அச்சுறுத்தலை  பெருவீழ்ச்சி நிலைக்கு குறுகிய காலப் பகுதிக்குள் கொண்டு வர முடிந்ததோடு, தங்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்வதற்கு வசதியளிக்கும் வகையில் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் எதிரணிக் கட்சிகள் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டதோடு,  மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. ஆனால் அக்கட்சிகளின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலின் பொருட்டு நாடெங்கிலும் 12 ஆயிரத்து 985 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாக்குச் சாவடிகளில்  காலை 7.00 மணி முதல் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் வாக்களித்தனர். அண்மைக் காலத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளுடன் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்ட போதிலும், மக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாக்களிப்பில் ஈடுபட்டனர். இதன் ஊடாக தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதேநேரம் நேற்றுக் காலை முதல் பிற்பகல் வரையும் வாக்களிப்பு மிகவும் அமைதியாக இடம்பெற்றுள்ளதோடு குறிப்பிட்டுக் கூறக் கூடியளவுக்கு பாரிய தேர்தல் வன்முறைகள்  இடம்பெறவில்லை.

இதேவேளை வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அனைத்து வாக்குச் சாவடிகளும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, கொரோனா தொற்று அச்சுறுத்தல் அற்றவையாக சுகாதார வழிகாட்டலுகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுகாதார சேவைகள் திணைக்களமும் மேற்கொண்ட சேவைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும்,

கடந்த காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் வாக்களிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதோடு முடிவுகளும் நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை அந்த நடைமுறைக்கு மாற்றமாக இன்று காலை முதல்தான் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகின்றன. கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். என்றாலும் இன்று பிற்பகல் முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்க எதிர்பார்த்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்திருக்கின்றார்.

மக்கள் அளித்திருக்கும் ஆணையை மதித்து செயற்படவும் வெற்றியை அமைதியாகக் கொண்டாடவும் அரசியல் கட்சிகள் தவறக் கூடாது. நாட்டினதும் மக்களினதும் சுபிட்சம் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் செயற்பட வேண்டும்.கட்சிகளின் ஆதரவாளர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் பெருவீழ்ச்சிநிலைக்கு கொண்டு வரப்பட்டு தேர்தலை ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் ஊடாக உலக வரலாற்றில் இலங்கை அழியாத்தடம் பதித்து விட்டது. இதற்கான பெருமையும் கௌரவமும் பெருமையும் ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையுமே சாரும்.


Add new comment

Or log in with...