பரிவு, கருணையை பிறருக்கு வழங்கி கடவுளின் கைகளில் கருவியாய் செயல்படுவோம் | தினகரன்


பரிவு, கருணையை பிறருக்கு வழங்கி கடவுளின் கைகளில் கருவியாய் செயல்படுவோம்

பொதுக்காலத்தின் 18ஆம்  ஞாயிறான கடந்த ஞாயிறன்று  இறைவார்த்தை எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவர் இறைவன் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

 ‘உண்மையின் உரைகல்லாக’ இருந்த திருமுழுக்கு யோவான், ஏரோது மன்னனிடம் தவறைச் சுட்டிக்காட்டியதால் அவன் அவரது தலையை வெட்டிக் கொன்று விட்டான். இச்செய்தியைக் கேள்விப்படும் இயேசு தனிமையான ஓர் இடத்திற்கு வருகின்றார்.

நற்செய்தியாளர் மத்தேயு  இயேசு வந்த அந்தத் தனியான இடம் பெத்சாய்தா (லூக் 9:10) என்று குறிப்பிடுவார். இப்படித் தனிமையான ஓர் இடம்தேடி வந்த இயேசுவைத் தேடி மக்கள் வருகின்றார்கள். அப்பொழுது இயேசு, ‘நாமோ தனிமையான இடம்தேடி வந்திருக்கின்றோம்...! இங்கேயும் இவர்கள் வந்துவிட்டார்களே!’ என்று அவர்கள் மீது சினம் கொள்ளவில்லை. மாறாக அவர்கள்மீது அவர் பரிவுகொண்டு அவர்களிடம் இருந்த உடல் நலமற்றவர்களை குணப்படுத்துகின்றார்.

இயேசுவுக்கு தான் இந்த மண்ணுலகத்தில் இருக்கப்போவது குறுகிய காலம்தான் என்று தெரிந்ததால் அவர் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு நன்மைகளைச் செய்துகொண்டே இருந்தார். எனில் (திப 10: 38), நாமும் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் நன்மைகளைச் செய்ய கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

இயேசு தன்னைத் தேடி வந்த மக்கள் நடுவில் இருந்த உடல்நலம் குன்றியவர்களை குணப்படுத்தி அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கையில் மாலை நேரம் ஆகிவிடுகின்றது. இதனால் சீடர்கள் இயேசுவிடம்  மக்களை ஊர்களுக்குச் சென்று தேவையான உணவை வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பி விடும் என்கிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரிடம் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அது என்னவெனில், பொறுப்பைக் கையில் எடுக்காமை அல்லது சாக்குப்போக்குச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது.

இயேசுவின் சீடர்கள், மக்கள் தங்களுடைய தலைவர் இயேசுவைத் தேடித்தான் வந்திருக்கின்றார்கள். ஆகையால், அவர்களுக்கு உணவளிப்பது தங்களுடைய கடமை என்று மக்களுக்கு உணவளிக்க ஏதாவது செய்திருக்க வேண்டும்.

அவர்களோ அது தங்களுடைய பொறுப்பல்ல என்று தங்களுக்கு இருந்த பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள்.

 இன்றைக்கும் கூட பலர் தங்களுக்கு இருக்கின்ற சமுதாயக் கடமைகளை நிறைவேற்றாமலும், தாங்கள் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் வறியவர்களுக்கும் காவலாளிகள் (தொட 4:9) என்பதை உணராமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது ஒரு பொறுப்பற்ற தன்மையாகும்.

இயேசு தன்னுடைய சீடர்கள் இப்படிப் பொறுப்பற்ற தன்மையுடன் தங்களால் மக்களுக்கு உணவளிக்க முடியாது என்று கூறியதைப் பார்த்துவிட்டு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று சொல்லி பொறுப்பை அவர்கள் கையில் கொடுக்கின்றார்.

‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பொறுப்பினைக் கொடுத்தாலும், அவரே அதை முன்னின்று செய்து முடிக்கின்றார்.

 ‘தன்னை நம்பி வந்த மக்களைப் பசியோடு அனுப்பினால், அவர்கள் வழியில் மயங்கி விழுந்துவிடக்கூடும்’ என்பதை நன்றாகவே அறிந்த இயேசு சிறுவன் ஒருவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து  வானத்தை அண்ணார்ந்து பார்த்து கடவுளைப் போற்றி, அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுக்க  சீடர்கள் மக்களுக்குக் கொடுக்கின்றார்கள். அனைவரும் வயிறார உண்கின்றார்கள்.

இயேசு செய்த இந்த வல்ல செயல் நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறுகின்றது. இயேசுவின் உயிர்ப்புதான் நான்கு நற்செய்தி நூல்களில் சொல்லப்படுகிறது. அதற்கடுத்து நான்கு நற்செய்தி நூல்களிலும் சொல்லப்படுகின்ற ஒரே நிகழ்வு  இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது.

இயேசு செய்த இந்த வல்ல செயல்  திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல் (திபா 145: 15) இறைவன் எல்லா உயிர்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச்சொல்கின்றது.

இறைவாக்கினர் ஏசாயா நூலில், தாகமாய் இருப்பவர்களே கையில் பணமில்லாதவர்களே! நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று கடவுள் அழைப்பார். அதற்கு அர்த்தம் தருகின்ற வகையில் நற்செய்தியில் இயேசு தன்னைத் தேடி வந்த மக்களுக்கு உணவளிக்கின்றார்.

இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குச் சீடர்கள் வழியாக உணவளித்து போன்று பசியோடு இருக்கும் மக்களின் தேவைகள் நிறைவேற இயேசுவின் சீடர்களைப் போன்று நாம் கடவுளின் கைகளில் கருவியாய் செயல்வோம். அதன்மூலம் மண்ணில் இல்லாமையை இல்லாதாக்குவோம். (ஸ)


Add new comment

Or log in with...