புதையலுக்கு ஒப்பாகும் விண்ணரசு; நற்செய்தியில் இயேசு கூறும் உவமை | தினகரன்

புதையலுக்கு ஒப்பாகும் விண்ணரசு; நற்செய்தியில் இயேசு கூறும் உவமை

(கடந்த வாரத் தொடர்)

இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும். இயேசு விண்ணரசைப் புதையலை ஒப்பிடுவதன் வழியாக ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றார். அது நற்செய்தியில் வரும் புதையலைக் கண்டுபிடித்த நபர் தமக்குள்ள யாவற்றையும் விற்று அல்லது தமக்குள்ள எல்லாவற்றையும் இழந்து புதையல் இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதுபோல நாமும் நம்மிடம் இருப்பதை; ஏன் நம்மையே இழக்கத் தயாராய் இருந்தோமெனில் விண்ணரசை உரித்தாக்கிக் கொள்ளலாம். இது இயேசு சொல்லும் செய்தி இதுவே.

இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்போதுகூட, “தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்” (மாற் 8: 34) என்றே சொல்கின்றார்.

ஆகையால், இயேசுவின் சீடராக இருப்பதற்கு எப்படித் தன்னலத்தை துறப்பது அல்லது இழப்பது அவசியமானதாக இருக்கின்றதோ, அப்படி விண்ணரசை நம் உரித்தாக்கிக் கொள்வதற்கு நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

விண்ணரசை அடையும்பொழுது எல்லாவிதமான ஆசியும் கிடைக்கும்

நாம் நம்மை இழந்து விலை மதிக்கப்பற்ற புதையலாகிய விண்ணரசை அடைகின்போது எல்லா விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்கின்றோம் என்கின்ற இன்னோர் உண்மையையும் அந்த இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்றது.

இந்த உண்மையை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அன்றைய முதல் வாசகத்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சாலமோன் மன்னனிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கின்றபொழுது, அவர், “ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்” என்பார்.

இதனால் உவமை அடையும் கடவுள் அவருக்கு அவர் கேட்ட ஞானத்தை மட்டுமல்லாது அவர் கேளாத செல்வத்தையும் புகழையும் தருவதாக வாக்களிப்பார் (1அர 3: 13). ஆம். நாம் நம்மை இழந்து விண்ணரசை அடைகின்றபோது விண்ணரசில் இறைவன் நமக்கு எல்லாவிதமான ஆசிகளையும் தருவார்.

இயேசுகூட “ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6: 33) என்றுதான் கூறுவார். ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதையும் நம்மையும் இழந்து, விண்ணரசை உரித்தாக்கிகொண்டு, அதன்மூலம் எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முயல்வோம்.

பல நேரங்களில் நாம் நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இல்லை என்பது வேதனை கலந்த உண்மை. எப்பொழுது நாம் நம்மை இழக்கத் துணிகின்றோமோ, அப்பொழுது நாம் நம்மைக் கண்டுகொள்கின்றோம். ஆகையால் நாம் விண்ணரசுக்காக நம்மையே இழக்கத் தயாராவோம்.

அருட்பணி மரிய அந்தோனிராஜ்


Add new comment

Or log in with...