வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | தினகரன்


வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இலங்கைக்கு நேரடி தாக்கம் கிடையாது; நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்கும் 

வடக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

எனினும் இந்த தாழமுக்கம் உருவாவதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாதென்றபோதும் சில பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். குறிப்பாக நேற்று முதல் இன்று 04 ஆம் திகதியும் 05,06ஆம் திகதிகளிலும் நாட்டில் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் மலையகத்தின் சில பகுதிகளிலும் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். பெரும்பாலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.  

வடக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகுமென கூறப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்பதுடன் ஐந்து நாட்கள் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்ப்பட்டுள்ளது. இது குறிப்பாக இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை உருவாக்க மாட்டாது எனினும் கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் குஜராத், மகாராஷ்டிராவுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...