பொதுத் தேர்தலில் கிழக்கு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் | தினகரன்


பொதுத் தேர்தலில் கிழக்கு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

“பெண் ஒருவருக்கு அரசியல் கட்சியில் வாய்ப்பு பெறுவதே சவாலானதாக உள்ளது. அவ்வாறு இருக்கையில் அதனை வெற்றி கொண்டு பெண் ஒருவர் அரசியலில் பிரவேசிக்கப்படுகின்றபோது அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற வசைபாடல்களுக்கு நான் விதிவிலக்காக இல்லை. அதேபோன்று அரசியலில் அங்கீகாரம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.” என ஆதங்கத்தோடு கூறினார் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி.

"மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்களைச் சேர்ந்த 304 பேர் போட்டியிடுகின்றபோதும் என்னை இலக்கு வைத்து தனிநபர் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இந்த விடயங்கள் சம்பந்தமாக தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்களுக்கு எனது முகநூலினூடாக பதில்களையும் வழங்கியுள்ளேன்" என்று மங்களேஸ்வரி கூறுகின்றார்.

அரசியல் போட்டி காரணமாக சமூக ஊடகங்களிலும் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தனக்கு எதிரான வசைபாடல்களால் அவர் பெறும் சவால்களை மட்டக்களப்பு தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிர்கொண்டு வருகின்றார். இவர் போன்று இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் மீதும் சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், போஸ்ட்கள், பின்னூட்டல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கள் செய்திருக்கும் 16 கட்சிகளில் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 11 வேட்பாளர்கள் மாத்திரமே பெண்களாவர். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு பெண் பாராளுமன்ற பிரதிநித்துவமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. அவ்வாறு அரசியலுக்கு வந்த பெண்கள் கூட வாரிசு அரசியலாகவோ அல்லது செல்வாக்கு மிக்க குடும்ப பின்னணியுடனே அரசியலுக்கு வந்திருக்கிறார்களே ஒழிய சாதாரண குடும்பரீதியாக அரசியலுக்கு வரமுடியவில்லை. இதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாக கூறுகின்றார் மனிதஉரிமை ஆர்வளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான நளினி ரட்ணராஜா,

"பெண்கள் பொதுவெளியில் வந்துவிட்டால், இரவு வேளைகளில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று தாமதித்து வீட்டுக்கு வரவேண்டியேற்படும், பல ஆண்களுடன் பேசிக்கதைத்து பழக வேண்டி வரும், அவ்வாறு இருக்கும் வேளையில் இலகுவாக அவளை நடத்தை கெட்டவள் என்று நடத்தைக் கொலை செய்துவிடுவார்கள்.

உதாரணமாக, நான் அரசியலுக்கு வரப்போகின்றேன். வேட்பாளராக இடம்பெறப் போகின்றேன் என்ற ஊகத்தின் அடிப்படையில் என்மீது விபச்சாரி, நடத்தை கெட்டவள், குடிகாரி என பல சேறுகள் பெண்கள்மீது பூசப்படுவதனால் அந்தப் பயத்தினால் அவள் மற்றும் அவள் சார்ந்த குடும்பம் அரசியலுக்குள் வர அனுமதிக்காது. இதனை முதலில் நிறுத்த வேண்டும்.”

தேர்தல் முறையிலும் பெண்கள் முன்னுக்கு வராமுடியதளவு குறைபாடுகள் காணப்படுவதாகவும் நளினி ரட்ணராஜா தெரிவிக்கின்றார்,

“பெண்களை வேட்பாளராக நிறுத்துவதில் தீர்மானம் எடுப்பதில் பெண்களை இணைத்துக் கொள்வதிலும் ஒரு தெளிவில்லாத நிலை அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றன. விருப்புவாக்கு முறை பெண்களுக்கு ஒரு பின்னடைவான முறையாகக் காணப்படுகின்றது. கட்சிக்கு வாக்களித்தாலும் பெண்களுக்கு விருப்பு வாக்கு போடாத நிலைமை காணப்படுகின்றது.”

இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் உள்ள ஆண், பெண் என அனைத்துப் பிரஜைகளுக்கும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் அவற்றை நடைமுறையில் பார்க்கின்ற போது அதில் பாரிய குறைபாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த பொதுத் தேர்தலில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வகிபாகம் மற்றும் பங்கேற்பு குறைவாகவே காணப்படுகின்றது.

இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் 52 வீதமானவர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் பாராளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துபவர்கள் வெறுமனே 5.7 வீதமாகும். இந்த நிலை மாற்றத்துக்காக பலரும் பல வகையில் முயற்சித்தும் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்பாடுகள் அமையப் பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு சமூகரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கான ஊக்குவிப்புக்கள் குறைவாக காணப்படுவதால் பெண்களால் தேர்தலில் போட்டியிட முடியாதுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் கூறுகின்றார்.

“உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களுக்கு என இட ஒதுக்கீடு காணப்படுகின்து. மாகாண சபையிலும் அதற்கான சட்டம் அமுலில் இருக்கின்றன. ஆனால் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பாராளுமன்றத்திலும் அவ்வாறான கட்டாய சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.

வன்முறை சார்ந்த அரசியல் கலாசாரமாகவும் இருப்பதால் பெண்கள் அரசியல் கேட்பதற்கு பின்னடைகின்றனர். சமூகரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கான ஊக்குவிப்புக்கள் குறைவாக காணப்படுகின்றன. என்றார்

எனினும் தேர்தல் கேட்பதற்கான வாய்ப்புக் கிடைக்குமானால் தான் தயாரக இருப்பதாகவும் கட்சிகள் பெண்களை வேட்பு மனுவில் போதியளவு உள்ளடக்காததல் பெண்களால் தேர்தல் கேட்க முடியாதுள்ளதாக சட்டத்தரணி ஆரிகா கூறுகின்றார்,

உள்ளுராட்சி ஒதுக்கீடு வந்த பிறகுதான் பெண்கள் ஓரளவு எமது கட்சி அரசியலிலும் உயர்பீட சபைகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளில் பெண்கள் வேட்பு மனுக்களில் உள்ளடக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கொரு வாய்ப்புக்கிடைக்குமாக இருந்தால் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன். பெண்களுக்கான ஆதரவைப் பெருக்குவதற்கு மக்களிடையே பாரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.” என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் 20 கட்சிகளும் 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. எனினும் போட்டியிடும் 20 கட்சிகளை எடுத்துக் கொண்டால் அதில் 200 வேட்பாளர்களில் ஆக 14 பேரே பெண் வேட்பாளர்களாவர். இவ்வாறு பெண்களுக்கு தேர்தலில் போட்டிடுவதற்கு வேட்பு மனுவில் இடம் வழங்கப்படாமை பாரிய பின்னடைவாக கருதப்பட வேண்டியுள்ளது. 

உள்ளுராட்சி மன்றத்தில் பெண்களை 25 வீதம் உள்வாங்குவதற்கான கோட்டாமுறை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் 2,526 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தேர்தல்களில் கட்சி வேட்பு மனுவின்போது குறைந்தது 5 வீதம் பெண்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். 1973 அரசியலமைப்பின் படி பாகிஸ்தான் தேசிய அசெம்பிலியில் 10 ஆசனங்கள் 1985 ஆண்டில் பெண்களுகளுக்கு  ஒதுக்கப்பட்டது. பின்னர் அது அதிகரிக்கப்பட்டு அதிபர் பர்வேஸ் முஸர்ரப் காலத்தில் 2002 ஆம் ஆண்டில் 60 ஆசனமாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பல ஆசிய நாடுகளில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சட்ட ஏற்பாடுகளின் மூலம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும் என்று கூறுகிறார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப்,

“ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையில் பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இம்முறை தேர்தலில் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக சில கட்சிகள் பெண்களை வேட்மனுவில் உள்ளடக்கியிருப்பதை அறியமுடிகிறது. தேசிய பட்டியலில் கூட வரக்கூடியளவு பெண்களின் பெயர்கள் சில காணப்படுகின்றன.

எமது நாட்டடைப் பொறுத்தவரையில் பெண்களுடைய விடயத்தில் எதுவும் இலேசாக கிடைக்கவில்லை. அதற்காக நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. எப்பவுமே பெண்களை வீட்டு வேலை செய்பவர்களாகவே பாரக்கும் கலாச்சாரத்தில் நாம் இருக்கின்றோம். ஆனாலும் உள்ளுராட்சி மன்றங்களில் ஒதுக்கீடு வழங்கியது போல் பாராளுமன்றத்துக்கும் கிடைக்கும். விகிதாசார முறையில் எங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எல்லா கட்சிகளும் தங்களது தேசிய பட்டியலில் பெண்களை உள்வாங்கி பெண்களாலும் திறமையாக சாதிக்க முடியும் என்ற சந்தர்ப்பம் கிடைத்தால் எதிர்காலத்தில் ஆண்கள் குறைந்த பெண்கள் அதிகமாக இருக்கும் பாராளுமன்றம் உருவாகும் என்பதில் திடமான நம்பிக்கை இருக்கின்றது.” என்றார்.

எனினும், இவ்வாறான ஏற்பாடுகளுக்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அரசியலில் போட்டியிடுவதற்கு வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்டத்தில் 2001 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரஃப் கூறுகின்றார்,

“எமது கலாசாரம் மற்றும் மார்க்கத்தை தங்களுக்கு வேண்டிய மாதிரி திரிபுபடுத்தி செயற்படுவதனாலும் ஆண்களே நீண்ட காலமாக இவ்வாறு அரசியல் செய்து கொண்டிருப்பதால் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவது சிரமமாக இருந்தது. நான் அரசியலுக்கு வந்தபோதும் அவ்வாறான மிகவும் கஷ்டமான நிலை தான் காணப்பட்டது. ஆனால் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். இதை ஒரு சாதகமான நிலையாகத்தான் காண்கின்றேன். தாமதம் தான், ஆனாலும் அடுத்ததடுத்த காலகட்டங்களில் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் பங்கெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.” என்றார்.

எனினும், முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவதை இஸ்லாம் மார்க்கம் தடைசெய்யவில்லை என்றும் அதற்கான சூழ்நிலை இங்கு காணப்படாதுள்ளதாகவும் கூறுகின்றார் உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட்,

“எமது கட்சியால் நாட்டின் சிலபகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட்ட போதும் எந்தவொரு பெண் வேட்பாளரும் விண்ணப்பிக்கவில்லை. எங்களது கட்சியில் உயர்பீடத்திலும் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். பெண்கள் அரசியலில் பங்கெடுப்பது முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமல்ல எல்லா சமூகங்களிலும் பின்னடைவு காணப்படுகின்றது. பெண்கள் அரசியலுக்கு வராமைக்கு வன்முறையான அரசியல் கலாசாரமே காரணமாகும். இஸ்லாத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு தடை விதிக்கவில்லை. பெண்களினுடைய தன்மானத்தையும், இறைமையையும் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தால் மாத்திரம்தான் பெண்கள் அரசியலுக்கு வர அனுமதித்திருக்கிறது." என்றார்.

ஆனால் கிழக்கில் தேசிய அரசியலில் பெண்கள் வருவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறைத் தொகுதியைச் சேர்ந்த சிறியாணி விஜேவிக்ரம என்ற பெண் உறுப்பினர் மாத்திரம் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தார். ஆனால் முஸ்லிம், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் கிழக்கு மாகாணத்திலிருந்து கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டால் தான் மக்களால் வாக்களிக்க முடியும். இந்த பொதுத் தேர்தலில் 196 பிரதிநிதிகளை மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுப்பதற்காக 7458 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெறுமனே 819 பெண்களுக்கு மாத்திரம் தான் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலுமாக அபேட்சகராவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

வேட்பு மனுவையே வழங்காதபோது எவ்வாறு ஜனநாயகமாக கருதமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன்,

“இந்த தேர்தலில் அதிகளவு வண்முறை, வெறுப்புப் பேச்சு, தேர்தல் சுகாதார விதிமுறைகளை மீறும் மவாட்டமாக அம்பாறை காணப்படுகின்றது. அதிகளவான கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. ஆண்களைவிட குறைந்த அளவான பெண்களே தேர்தலில் போட்டியிடுவதைக் காணமுடிகின்றது. வெளிமட்டத்தில் அரசியல் மேடைகளில் கட்சிகளும் சுயேட்ச்சைக் குழுக்களும் ஜனநாயகம் பற்றிப் பேசினாலும் உள்ளக ஜனநாயகத்தை இவர்கள் பின்பற்றுகின்றார்களா என்ற சந்தேகம் எழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.” என்றார்.

இந்நிலையில் பெண்களின் அரசியல் பிரநிதித்துவம் அதிகரிக்கப்படுவதற்கு கட்சிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கத்தின் தேசிய இணைப்பாளர் வாணி சைமன்,

"இலங்கையில் வன்முறை அரசியல் கலாசாரம் தான் வளர்ந்திருக்கின்றது. இவ்வாறு அரசியலுக்கு வருபவர்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இது பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு பெரும் தடையாக காணப்படுகின்றது.

பெண்களை அரசியலில் உள்வாங்குவதற்கான சில வேலைத்திட்டங்களையும் எமது அமைப்பினால் செயற்படுத்தி வருகின்றோம். இதற்கான வலுவூட்டல் மற்றும் பயிற்சிகளையும் முன்மெழிவுகளையும் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம். சட்டத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படாதுள்ளது. அதற்கான சட்ட ஏற்பாடுதான் தற்போது அவசியமாக இருக்கின்றது. கட்சிகள் வெறுமனே பெண்களை போடுவதற்காக ஒன்றிரண்டு பேரை போடுவதை விட யதார்த்தபூர்வமாக இயங்குபவர்களை வேட்பாளர்களாக போட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் சில பெண்கள் போட்டியிட்டாலும் ஆக 2 பேர் தான் வெளிப்படையாக இயங்குபவர்களாக இருக்கின்றனர். 54 வீத பெண் வாக்காளர்களைக் கொண்ட இலங்கையில் கட்சிகளில் ஆண் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும். கட்சிகள் பெண்களை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று தான் கட்சிகளிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம். “

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 இன மக்களும் செறிந்து வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் சார்ந்தவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவர். அதேபோன்று தான் பெண்களும் தாம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதற்கு அவர்களினுடைய நிலைமையை உணர்ந்த பெண்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். 

கிழக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருக்கின்றன, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்கின்றனர். இவ்வாறு பெண்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் ஏராளம் இங்கு காணப்படுகின்றன. மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் இத் தேவைகளை நன்குணர்ந்து தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பும் வரவேற்ப்பும் பொதுமக்களிடத்தில் எந்தளவு வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

இந்நிலையில் பெண் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக பெண் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கட்சி வேறுபாடின்றி “அவளுக்கு ஒரு வாக்கு" எனும் விழிப்புணர்வுத் திட்டத்தை மக்கள் மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கில் பெண்கள் அரசியலுக்கு வருவதில் ஒரு இருக்க நிலையும், பெண்களிடையே பின்னடைவும் காணப்படுகின்றது. இந்த தடைகள் பெண்கள் அரசியலில் ஈடுபட தளர்த்தப்பட வேண்டியுள்ளது. ஆண்களை விட சனத்தொகையிலும் வாக்காளர்களிலும் அதிகமான எண்ணிக்கையுடைவர்களான பெண்கள் சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் மிகக் குறைவான வீதத்தைக் கொண்டிருப்பது பாரிய பின்னடைவாகும். இது அவர்கள் தொடர்பிலான தேவைகள், கொள்கைகள் இயற்றப்படுவதற்கு பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்ல வேண்டியது அவசியமாகும். அதற்கான பொறிமுறைதான் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் உள்ளது.

ஏ. மொஹமட் பாயிஸ்


Add new comment

Or log in with...