வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது | தினகரன்


வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

- கொலை குற்றச்சாட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி  மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) காலை இக்கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, மீகொடை பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றில் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 0.45 வகை தோட்டாக்களை பயன்படுத்தக்கூடிய கைத்துப்பாக்கி ஒன்று, அவ்வகையான தோட்டாக்கள் 10, 9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் 10 கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்குலானை, கரையோர வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு இச்சந்தேகநபர், திட்டமிட்ட குற்றவாளியான சிங்ஹார அமல் ஷாமிந்திர சில்வா அல்லது அஞ்சு என்பவரின் நண்பர் எனவும் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, பிலியந்தலை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட கொலைச் சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், இச்சந்தேகநபர் மீது  கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரிடம், கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...