முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு மரண தண்டனை

2015 ஜனாதிபதித் தேர்தல் கொலை வழக்கு:

முன்னாள் பிரதி அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி யொஹான் ஜயசூரிய நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட தொடங்கொட சுனில் பெரேரா என்பவருக்கு குற்றவாளிகள் மூவரும் தலா 02 இலட்சம் ரூபா வீதம் 06 இலட்சம் ரூபாவையும் சம்பவத்தில் படுகாயமடைந்த வீ.கருணாதாச,  மொஹமட் இல்ஹாம் ஆகியோருக்கு மூன்று குற்றவாளிகளும் தலா 01 இலட்சம் வீதம் 03 இலட்சம் ரூபாவையும் அபராதமாக செலுத்துமாறும் நீதவான் தீர்ப்பளித்தார்.

மேற்படி அபராதத் தொகைகளை செலுத்தாவிடின் மரண தண்டனை கைதிகளுக்கு மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படுமெனவும் நீதவான் தீர்ப்பளித்தார்

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் 2015.1.5.ஆம் திகதி காவத்தை நகரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பிரசார மேடை அமைத்துக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை மரணிக்கச் செய்து 03 பேரை படுகாயமடைய செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் 07 பேர் மீதுதொடரப்பட்டு வந்த வழக்கு விசாரணையின் பின்னர் இத்தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

பிரேமலால் ஜயசேகர உட்பட முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலன்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன சில்வா ஆகியோருக்கே இம் மரண தண் டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் ஏனைய சந்தேகநபர்கள் நால்வரையும் நீதவான் இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்தார்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்திலும் பிரதான வீதியிலும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...