முஸ்லிம்களின் ஒற்றுமை அடையாளம் ஹஜ்

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக ஹஜ் விளங்குகின்றது. இது பொருளாதார வசதி படைத்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஃபத்துல்லாஹ், மினா, அரபா, முஸ்தலிபா மற்றும் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவி உள்ளிட்ட தலங்களுக்கு சென்று இக்கடமை நிறைவேற்றப்பட வேண்டும். இது காலம் நிர்ணயிக்கப்பட்ட கடமையாகும்.

ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் கடமையாக்கப்பட்ட இக்கடமையானது ஒவ்வொரு வருடமும் துல் ஹிஜ்ஜா மாதத்தின் பிறை 08 முதல் பிறை 13 க்கு உட்பட்ட காலப்பகுதியிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். அதேநேரம் பிறை 10 நாள் ஹஜ்ஜுப் பொருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. துல் ஹிஜ்ஜா என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பில் 12 வது மாதமாகவும் இஸ்லாத்தின் புனித மாதங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

இக்கடமையை நிறைவேற்றுவதற்காக வருடா வருடம் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்கா, மதீனாவில் கூடுகின்றனர். அவர்கள் இன, மொழி, நிற, பிரதேச, பதவி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே நிற ஆடை தரித்தவர்களாக இறைவனுக்கு தம் அடிமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர். தம் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் மாத்திரமல்லாமல் தியாகத்தையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் பகிரங்கப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் அற்புதமான சர்வதேச ஐக்கிய மாநாடாகவே விளங்குகின்றது.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் ஹஜ் கடமையும் ஹஜ் பெருநாளும் இப்றாஹீம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மை என்பன நினைவுகூறப்படுவதை அடித்தளமாகக் கொண்டிருக்கின்றது. அவர்களது தியாகம், அரப்பணிப்பு மற்றும் சகிப்புதன்மை என்பன படிப்பினைகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்தவை. அதனால் உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொரும் அவற்றில் படிப்பினைகள் பெறலாம். குறிப்பாக இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு இப்றாஹீம் (அலை) அவர்களதும் அன்னாரது குடும்பத்தினரதும் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மை என்பன முன்னுதாரணம் மிக்கவையாக ஆக்கப்பட்டுள்ளன.

இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் பிரதேசத்தில் வாழ்ந்த இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆற்றிய பணிகள் மனித வரலாற்று ஒட்டத்தின் திருப்புமுனைக்கு உறுதியான அடித்தளமாக அமைந்தது. அதேநேரம் அவரது வழித்தோன்றல்களில் இருந்து பல இறைத்தூதர்களை இந்த உலகம் பெற்றுக்கொண்டது. அவர்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் பரம்பரையில் வந்த இறுதித் தூதராக விளங்குகின்றார்.

இப்ராஹீம் (அலை) அவர்களில் நிலைகுலையாத உறுதிமிக்கத் தன்மையை கட்டியெழுப்பி பக்குவப்படுத்தி நெறிப்படுத்துவதற்காக பல்வேறு சோதனைகளை இறைவன் அன்னாருக்கு வழங்கினான். அவை கடுமையான சோதனைகளாக இருந்தன. ஆனாலும் அவர் அந்த சோதனைகள் குறித்து ஏன் என்று திருப்பி கேளாது அனைத்தையும் நிறைவேற்றி தம் அடிமைத்துவத்தை இறைவனுக்கு வெளிப்படுத்தினார். அதன் விளைவாக அவர் என்றும் நினைவு கூரப்படும் ஒருவராக திகழுகின்றார்.

அதாவது தம் மூதாதையரின் சமய அனுஷ்டானங்களுக்கு மாறு செய்ததால் அவர் அன்றைய ஆட்சியாளரால் நெருப்பில் வீசப்பட்டு தண்டிக்கப்பட்டார். அதனை அவர் அஞ்சாது ஏற்றுக் கொண்டார். ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார். பிள்ளை குறித்து எல்லையில்லாத ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த அன்னாருக்கு முதுமையில் ஆண் குழந்தை கிடைக்கப் பெற்றது. அதன் ஊடாக அவர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அக்குழந்தையையும் தாயையும் மனித சஞ்சாரமற்ற பிரதேசமாக விளங்கிய இன்றைய மக்காவிலுள்ள கஃபா பிரதேசத்திற்கு அழைத்து சென்று தனியாகச் தங்கச் செய்யும்படி அன்று விடுக்கப்பட்ட கட்டளையை அவர் நிறைவேற்றினார்.

கடல் மட்டத்திலிருந்து 909 அடிகள் உயரத்தில் அமைவுற்று இருக்கும் மக்கா கஃபா பிரதேசம் கரடுமுரடான மலைப்பாங்கான பிரதேசமாகும். அன்றைய காலகட்டத்தில் இப்பிரதேசம் நீர்வசதியோ, மனித நடமாட்டமோ இன்றி காணப்பட்டது.

என்றாலும் ஈராக்கிலிருந்து அந்தப் பிரதேசத்தை சென்றடைய இப்றாஹீம் (அலை) அவர்களும் அன்னாரது குடும்பத்தினரும் எவ்வளவு கஷ்டங்கள் சிரமங்களை அனுபவித்து இருப்பர் என்பதை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்களாலும் அங்கு சென்று வருபவர்களாலும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அப்படி இருந்தும் தம் பிள்ளையையும் மனைவியையும் அழைத்து சென்று தரிக்கச் செய்து விட்டு விஷேட பிரார்த்தையை மேற்கொண்ட இப்றாஹீம் (அலை) அவர்கள் பலஸ்தீனுக்கு சென்றார். என்றாலும் அவர் அவ்வப்போது வந்து தம் குழந்தை இஸ்மாயீலையும் மனைவியையும் பார்த்து செல்லக் கூடியவராக இருந்தார். ஆனால் சொற்ப காலத்தில் மற்றொரு கட்டளை. அக்குழந்தையை தம் கையாலேயே அறுத்து பலியிட வேண்டும் என்பதாகும். அக்கட்டளையை நிறைவேற்றவும் அவர் துணிந்தார். அதன் ஊடாக ஆடு உள்ளிட்ட சில கால்நடைகளை உழ்ஹிய்யா கொடுக்க இறைவனின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.

இவ்வாறான சோதனைகளை பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் தியாக உணர்வோடும் நிறைவேற்றிய இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனின் நெருக்கத்திற்கும் விருப்பத்திற்கும் உரியவரானார். அதன் ஊடாக அவர் உலகம் இருக்கும் வரையும் நினைவுகூறப்படும் முக்கியமானவர்களில் ஒருவரானார்.

தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் இணைத்துக் கொண்டு கஃபத்துல்லாஹ்வை நிர்மாணித்த இப்றாஹீம் (அலை) அவர்கள் அச்சமயமும் முக்கிய பிரார்த்தனையொன்றை நிகழ்த்தினார். அப்பிரார்த்தனையின் பிரதிபலன்களை மக்கா அடைந்து கொண்டிருக்கின்றது.

இப்றாஹீம் (அலை) அவர்களதும் அவரது குடும்பத்தினதும் தியாகங்களதும் அர்பணிப்புகளதும் அடித்தளத்தில் தான் ஹஜ் கடமையும் ஹஜ் பெருநாளும் அமைவுற்றுள்ளது-. அன்று இப்றாஹீம் (அலை) அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கஃபா பிரதேசத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு கட்டாயக் கடமையாக விதியாக்கப்பட்டிருக்கின்றது. அந்த குடும்பத்தின் தூய எண்ணமும் செயற்பாடுகளும் மாபெரும் மகத்துவம் மிக்கவையாகும்.

இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்கள் வாழ்ந்துள்ள போதிலும் அன்னாரின் செயற்பாடுகளும் பணிகளும் உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இட கால சூழல்களுக்கு அப்பால் உயிரோட்டம் மிக்க படிப்பினைகள் நிறைந்த முன்னுதாரணங்களாக விளங்குகின்றன.

ஆகவே இறைவனின் கட்டளைப்படி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு , சகிப்புதன்மை என்பன வழங்கும் செய்தியில் படிப்பினைகள் பெற்றுக் கொள்வது காலத்திற்கு ஏற்ற செயற்பாடாகும். அத்தோடு முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப பெருநாளை அமைத்துக் கொள்வதோடு உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுபவர்கள் அதற்குரிய ஒழுங்குகளை உரிய முறையில் பேணி செயற்படவும் தவறக் கூடாது.அவை ஹஜ் கடமையினதும் ஹஜ் பெருநாளினதும் தாற்பரியத்தை வெளிப்படுத்தக் கூடியதாக அமையும்.

மர்லின் மரிக்கார்...?


Add new comment

Or log in with...