மஸ்கெலியா தமிழ் பாடசாலைகளின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

பரோபகாரி ஒருவர் 14 இலட்ச ரூபா உதவி

பிறந்த நாள் என்றால் சிலர் ஆடல், பாடல், கூத்து, கொண்டாட்டம் என நேரத்தையும் காலத்தையும் வீணாக்குவார்கள். அதில் பணத்தையும் செலவு செய்வார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளான மஸ்கெலியா கவரவில தமிழ் மகாவித்தியாலயத்திற்கும் நல்லதண்ணி தமிழ் மகாவித்தியாலயத்திற்கும் முருகானந்தன் பிரகாஷ் பாலனின் நினைவு தினத்திற்காக அவரது மனைவி நவமலர் பிரகாஷ்பாலன் தனது பிறந்த தினத்தன்று ஒரு பாடசாலைக்கு தலா ஏழு இலட்சம் ரூபா வீதம் உதவி வழங்கியுள்ளார்.

இரு பாடசாலைகளுக்கும் 14 இலட்சம் ரூபா செலவு செய்து குடிநீரை பெற்றுக் கொடுக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த இரண்டு திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடசாலையில் நீண்ட காலம் நிலவி வந்த குடி நீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவரும் சிந்தித்தால் மலையகக் கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹற்றன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா கவரவில் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஹற்றன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஹற்றன் கல்வி வலயத்தில் குடிநீர்ப் பிரச்சினை நிலவும் பாடசாலைகள் தொடர்பாக பலரின் கவனத்திற்கும் கொண்டு வந்த போதிலும் அவற்றுக்கு தீர்வு கிட்டவில்லை இன்று ஐ.எம் .எச் ஓ. நிறுவனத்தினூடாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதையிட்டு இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்று அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் கோட்டம் மூன்றில் அதிகஷ்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் உதவிக் கோட்ட காரியாலயம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்த காரியாலயத்தைத் திறந்து வைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான சகல ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வுக்கு ஐ.எம்.எச்.ஓ நிறுவனத்தின் முகாமையாளர் கந்தையா விக்னேஸ்வரன், கோட்டக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்...?
(ஹட்டன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...