ஹஜ்ஜுப் பெருநாள்; ஜனாதிபதி வாழ்த்து

ஹஜ் பெருநாள்; ஜனாதிபதி வாழ்த்து-President Gotabaya Rajapaksa Hajj Festival Greeting

இலங்கைவாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுக்கூர்ந்து உலகவாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

இக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களின் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்றுசேர்கின்றனர்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் இம்முறை வழமை போன்று மக்காவுக்கான யாத்திரைக்கு முஸ்லிம்கள் சந்தர்ப்பம் கிடைக்காத போதும் அந்த யாத்திரையின் மூலம் வெளிப்படுத்தப்படும் இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுகிறேன்.

ஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கம் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சயமக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளது.

புனித அல்குர் ஆனின் போதனைகளின் வழிநின்று வரலாறு நெடுகிலும் ஏனைய அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழந்துவரும் எமது நாட்டு முஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்.

இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...