விசாரணைகளுக்கு முகம்கொடுத்த பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வர்த்தக செயற்பாடுகள் குறித்து அவைகளின் தலைவர்கள் வொசிங்டன் சட்ட உறுப்பினர்களின் ஐந்து மணி நேர கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். 

கடும் போட்டி மற்றும் ஒழுங்கு முறையில் இருந்து தொழில்துறையில் ஏகபோக சுதந்திரத்தை அனுபவிப்பது தொடர்பில் பேஸ்புக், கூகுள், அமேசன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்தும் குற்றச்சாட்டு உள்ளது.  

இந்நிலையில் பேஸ்புக்கின் மார்க் சக்கர்பர்க், அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோர் தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தினர். யெல்ப் போன்ற சிறு நிறுவனங்களிடம் இருந்து தரவுகள் மற்றும் உள்ளடகங்களை திருடுவதாக கூகுள் மீது சட்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அமேசானில் விற்பனையாளர்களை நடத்தும் விதம், இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்களை பேஸ்புக் வாங்கியது, ஆப்பிள் ஓப் ஸ்டோர் விவகாரம் என இந்நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையில் வைக்கப்பட்டன. வீடியோ மூலமாக ஆஜராகிய இந்நிறுவனங்களின் அதிகாரிகள், தங்கள் நிறுவனமானது சிறு தொழில்கள் வளர உதவியாக இருந்ததாகவும், ஆரோக்கியமான போட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தனர். 

அரசியல்வாதிகள் பலரும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று ஒப்புக்கொண்டாலும், தற்போது அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...