வாழ்வில் அனைத்து யோகங்களுக்கும் அருள் புரியும் வரலெட்சுமி விரதம் | தினகரன்


வாழ்வில் அனைத்து யோகங்களுக்கும் அருள் புரியும் வரலெட்சுமி விரதம்

'பொருளில்லாதோருக்கு இவ் உலகில்லை, அருளில்லாதோர்க்கு அவ்வுலகில்லை' என்பதற்கு அமைவாக செல்வத்திற்கு அதிபதியான மகாலஷ்மிக்குரிய விரதமான வரலெட்சுமி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

சகலவிதமான செல்வயோகங்கள், சௌபாக்கியங்கள், புத்திரப்பேறு ,கன்னிப்பெண்களுக்கு மனம் ஒத்த கணவன் போன்ற சகல ஜஸ்வரியங்களையும் வேண்டி ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையான இன்று வீடுகளிலும் ஆலயங்களிலும் இவ்விரதத்தை பெண்கள் நோற்கின்றனர். ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுஷ்டித்தல் பெண்களுக்கு சிறப்பாக கருதப்படுகிறது.

வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு இந்து ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் நிறத்தாலான காப்பை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு அணிந்து கொள்வது வழக்கமாகும்.

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். எல்லோராலும் மிக சிறப்பாக அனுஷ்டிக்க இயலாவிட்டாலும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். விக்னேஸ்வர பூஜை தொடங்கி சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

விரதத்திற்கு தேவைப்படுபவை மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

வீட்டின் கிழக்குத் திசையில் ஈசான்ய மூலையில் பூஜைக்கான இடத்தை அமைத்து, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனிவாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி கும்பத்தில் நிரப்பவும்.மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள்நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக் கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்குதல் சிறப்பாகும்

ஆண்டுதோறும் வரலெட்சுமி நோன்பின்போது, திருமணமான சுமங்கலிப் பெண்கள் விரதம் இருந்து, வீடுகளில் லட்சுமி ஆவகணம் செய்து வழிபாடு நடத்தி, குங்குமம், பூ, வெற்றிலை, துணிமணிகள் உள்ளிட்டவற்றை ஏனைய பெண்களுக்கு வழங்கி வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, உலகம் முழுவதும் வாழுகின்ற இந்து மக்களால் இன்று வரலெட்சுமி நோன்பு, அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்த்தக்கதாகும்.

ஆர்.நடராஜன்...?
(பனங்காடு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...