மலையக பாடசாலைகளை ஓரளவாவது அபிவிருத்தி செய்தது நாம்தான்

மலையக பாடசாலைகளைக் கடந்த காலங்களில் நாமே ஓரளவாவது அபிவிருத்தி செய்தோம். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போது வடக்கு கிழக்கு கல்வி தொடர்பாகவும் மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் பேசிக்கொண்டிருந்தார்.தமிழ் மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறைகளையும்,பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வேண்டுமென கூறினார்.அவருடைய அந்த கலந்துரையாடலின் பயனாக வடக்கிற்கும் தெற்குக்கும் மலையகத்திற்கும் 6,000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 

அதன் காரணமாக ஓரளவு கல்வி வளர்ச்சி ஏற்பட்டன.அதனைத் தொடர்ந்து எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை.  

ஆகவே எதிர்வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் தெற்கில் மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி அப்பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர் நியமனங்களையும் பெற்றுக் கொடுத்து மலையக கல்வியை மேம்படுத்துவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாடு பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று ஹற்றன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. 

அவர் அங்குத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.. 

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்திகள் முற்றாக நிறுத்தப்பட்டன.தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.அதனாலேயே மலையக கல்வியிலும் வீழ்ச்சியேற்பட்டது. 

இன்று மலையத்தில் பல திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வசதி வாய்ப்பு இல்லாததன் காரணமாகவும்,தேசிய மட்டத்தில் போக முடியாததுள்ளனர்.அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் வகையில் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.அதற்கு விளையாட்டு மைதானங்களைப் புனரமைக்க வேண்டும். அது மாத்திரமன்று பாடசாலைகளில் காணப்படும் விளையாட்டு மைதானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.அதே போல் தோட்டங்களிலும் கிரமங்களிலும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க இப்பகுதியில் தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

ஹற்றன் விசேட நிருபர் 


Add new comment

Or log in with...