முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு SLPP க்கே

கண்டி, உடுகல மக்கள் சந்திப்பில் பிரதமர்

முஸ்லிம் சமூகத்தினர் பொதுத் தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுத்து பொதுஜன  பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    

எனது ஆட்சியிலேயே அனைத்து இன மக்களுக்கும் பாரபட்சமின்றிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கத்திலும் அப்பணிகள் தொடருமெனவும் பிரதமர் தெரிவித்தார். 

கண்டி-, உடுலகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 

முஸ்லிம் சமூகத்தினருக்கும் எமக்கும் கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளினால் இடைவெளி ஏற்பட்டது.அவை இம்முறை திருத்திக் கொள்ளப்படும். எமது அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன்.அவர்களுக்கு முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அப்போதைய அரசாங்கத்தில் 28 முஸ்லிம் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் அங்கம் வகித்தார்கள்.விடுதலை புலிகள் அமைப்பினால் காத்தான்குடி பள்ளிவாசல் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது முஸ்லிம் சமூகத்தினருக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

இனங்களை அடிப்படையாகக் கொண்டு எமது ஆட்சியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை பிரஜைகளுக்கே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

இனவாத கொள்கைகள் பௌத்த மதத்திற்கு முரணானது . அனைத்தின மக்களுக்கும் சிறந்த சேவையாற்றியுள்ளோம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...