மலையக வரலாற்றில் பொன்னெழுத்து பதிவு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கையில் இரு நூற்றாண்டு பழைமையான இருப்பைக் கொண்டவர்களாவர். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக ஆங்கிலேயர்களால் தென்னிந்தியாவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்ட அம்மக்கள், இலங்கையில் இரு நூற்றாண்டு பழைமை வாய்ந்த தேசிய இனம் ஆவர்.

வேறு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, இரு நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த இனமொன்றின் வாழ்க்கைத் தரம் வெகுதூரத்துக்கு முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். அம்மக்களும் நாட்டின் ஏனைய இன மக்களைப் போன்று சரிசமமான வாழ்க்கைத் தரத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் முன்னேறி, மற்றைய இனங்களுக்கு நிகரான அடிப்படை வசதிகளுடன் வாழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு எதுவுமே நடந்து விடவில்லை. இரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் அம்மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் பாரிய வேறுபாட்டைக் காண முடியாதிருக்கின்றது. ஆங்காங்கே வீடமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், லயன் வாழ்க்கைக்கு இன்னுமே முடிவு வந்து விடவில்லை. இரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகளற்ற லயன்களிலேயே இன்றும் ஏராளமானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சிறு தொகை மக்களே தங்களது வாழ்க்கையை ஓரளவு வளம்படுத்திக் கொண்டுள்ளனர். ஏனையோர் வறிய நிலையில் இன்னும் அவல வாழ்வே வாழ்ந்து வருகின்றனர். கல்வி, சுகாதாரம், குடிநீர், இருப்பிடம், வாழ்வாதாரம் போன்ற எதுவுமே கிடைக்காத நிலையில் வாழ்வோரின் எண்ணிக்கையே மலையகத்தில் கூடுதலாக உள்ளது. இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் மலையகத்தின் அரசியல் எனலாம்.

கடந்த காலத்தில் மலையகத்தின் அரசியல் பலமாக இருந்த போதிலும், அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டாபோட்டி காரணமாக மக்களின் நலன் மீது கவனம் செலுத்தப்படவில்லை. மலையக அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே முட்டி மோதிக் கொண்டனவே தவிர, தமது சமூகத்தை முன்னேற்றிக் கொள்வதில் பெரும் அக்கறை செலுத்திக் கொண்டதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழ் மக்களாவர்.

நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு வருடக்கணக்கில் போராடும்படியாக அவர்களது தலைவிதி அமைந்து விட்டது. மலையகத்தில் புதிய அரசியல் தலைமைத்துவங்கள் படிப்படியாக உருவெடுத்தன. அத்தலைமைத்துவங்கள் கடந்த நல்லாட்சி அரசுடன் தோழமை பூண்டு கொண்டன. மலையகத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை அதியுச்சத்துக்கு கொண்டு செல்லப் போவதாக அவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினர். ஆனாலும் நான்கரை வருட நல்லாட்சி அரசில் அம்மக்களுக்கென்று பெரிதாகக் குறிப்பிடும்படியாக எதுவுமே நடந்து விடவில்லை.

ஒரு சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு கல்வியும் பொருளாதாரமுமே பிரதான காரணிகளாக அமைகின்றன. மலையத் தமிழ் மக்களுக்கு இவையிரண்டுமே கிடைக்கவில்லை. அதன் காரணமாக அம்மக்களின் வாழ்வு அவலத்திலேயே தொடருகின்றது. முதலில் அவர்கள் கல்வியில் உயர வேண்டும். அதன் பின்னரே வாழ்வு உயரும்.

மலையக மக்களுக்கு கடந்த காலத்தில் கல்வி மறுக்கப்பட்டிருக்கின்றது. வளம் நிறைந்த தரமான பாடசாலைகளும், மாணவருக்கான அடிப்படை வசதிகளும் இருந்திருக்குமானால் அம்மாணவர்களும் உயர்ந்த நிலைமைக்குச் சென்றிருப்பார்கள். ஆனால் இன்றும் கூட மலையகத்தில் குறைபாடுகளுடனேயே பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

மலையத்துக்கென பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை ஆகும். ஆனால் அக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதில் மலையகத்தின் அரசியல்வாதிகள் காத்திரமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. எனவே மலையக பல்கலைக்கழகமென்பது நிறைவேறாமல் போனது.

ஆனால் மலையகத்திற்கான பல்கலைக்கழகமொன்று அமைய வேண்டுமென்ற கோரிக்கை இன்று வலுப்பெற்றுள்ளது. இன்றைய அரசும் அக்கோரிக்கைக்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அதேசமயம் மலையகத்தின் முன்னிலை வாய்ந்த பாரம்பரிய அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இப்போது இளமையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இ.தொ.காவின் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் ஜீவன் தொண்டமான் வயதில் மிகவும் இளையவர். துடிப்பு மிகுந்த இளைஞர் அவர். இன்றைய இளைய தலைமுறையினரின் மனஏக்கங்களை நன்கு புரிந்து கொண்டவர் ஜீவன் தொண்டமான்.

மலையக பல்கலைக்கழகம் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்டுள்ள மனஉறுதிப்பாடு உண்மையில் மகிழ்ச்சி தருகின்றது. அக்கனவு நிறைவேறுமானால் மலையக சரித்திரத்தில் அது பொன்னெழுத்துகளால் பதிக்கப்படுமென்பது உறுதி.


Add new comment

Or log in with...