குருணாகல் தொல்பொருள் கட்டட ஆவணங்களை கையளிக்க உத்தரவு | தினகரன்


குருணாகல் தொல்பொருள் கட்டட ஆவணங்களை கையளிக்க உத்தரவு

இடிக்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் சிறப்புமிக்க 2ஆம் புவனேகபாகு கட்டடம் | குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண

- குருணாகல் மேயரை கைது செய்யுமாறு அடிப்படை உரிமை மீறல் மனு

குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன இன்று (28) அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இரண்டாவது புவனேகபாகு மன்னனினால் கட்டப்பட்ட அரச சபை தகர்க்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த மேயரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இம்மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவானது சட்டத்தரணி சுனில் வட்டகல மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குருணாகல் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி கபில அதிகாரி, தொல்பொருள் பணிப்பாளர் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, குருணாகல் மாநகர சபை மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1293-1302 காலப்பகுதியில் குருணாகல் இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் புவனேகபாகு மன்னனினால் கட்டப்பட்டதாக கூறப்படும் புராதன அரச சபையானது, குருணாகல் நகர மத்தியில் இருந்ததாக, மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் மதிப்புடன் குருணாகல் புவனேக ஹோட்டலாக நடத்திச் செல்லப்பட்ட கட்டடத்தை மீண்டும் புனரமைப்புச் செய்வதற்காக சுமார்  90 இலட்சம் ரூபா வரை செலவாகும்  என புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது.

இதற்கமைய, அதற்கான குறித்த நிதியை குருணாகல் மாநகர சபை, வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தகர்க்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் கட்டடப் பகுதிக்குள் நுழைவதற்கு, குருணாகல் மாநகர சபை மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடையுத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்ட மா அதிபர் விடுத்திருந்த மற்றுமொரு கோரிக்கைக்கு அமைய, குறித்த தொல்பொருள் கட்டடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்றையதினமே (28) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, குருணாகல் நகர சபை மேயருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நகர அபிவிருத்தி குழுவின் அனைத்து கோப்புகள் மற்றும் குறிப்புகளையும், குருணாகல் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, வடமேல் மாகாண ஆளுநருக்கு நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...