ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலையுடன் தொடர்புடைய எவருக்கும் தொற்று இல்லை

ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலையுடன் தொடர்புடைய எவருக்கும் தொற்று இல்லை-Melsta Hospital Press Release-COVID19 Case

சுகாதார வழிகாட்டலின் கீழ் வைத்தியசாலை செயற்பாடுகள் முன்னெடுப்பு

ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களின் PCR பரிசோதனை பெறுபேறுகளில் எவருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அவ்வைத்தியசாலை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகமை, மெல்ஸ்டா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு மற்றும் பொதுச் சுகாதார அதிகாரியின் வழிகாட்டலில் ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் உடனடியாக அமுல்ப்படுத்தியிருந்த முற்காப்பு மற்றும் தொற்று ஒழிப்பு வழிமுறைகளின் பிரகாரம், வைத்தியசாலை தொடர்ந்து தனது வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியைப் பெற்று வழமை போன்று இயங்கி வருகின்றது. 

மேலும், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களின் பிரகாரம், வைத்தியசாலை வளாகத்தினுள் தொடர்ச்சியான கடும் தொற்று நீக்கல் மற்றும் துப்புரவாக்கல் செயற்பாடுகளை மெல்ஸ்டா வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பாக ராகம – மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர். இறைவன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எமது சகல ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

மெல்ஸ்டா வைத்தியசாலையைச் சேர்ந்த எம் அனைவருக்கும் இது ஒரு நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்த போதிலும், எமது சகல நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு, கரிசனை மற்றும் உத்வேகம் ஆகியன தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ள நிலையில், எமது சகல நோயாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் வைத்திய ஆலோசகர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் அடங்கலான சகல பங்காளர்களுக்கும் தற்போதும் எதிர்காலத்திலும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் ராகம – மெல்ஸ்டா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்பதை உறுதியளிக்கின்றேன்.” என்றார்.

எதிர்காலத்தில், ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலை, அதிகார அமைப்புகளுடன் கைகோர்த்து செயலாற்றும் என்பதுடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் அனுமதியின் கீழ் தனது வழமையான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலை பற்றி
ராகமை – மெல்ஸ்டா வைத்தியசாலை என்பது, சகல வசதிகளையும் கொண்ட பொதுச் சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலையாகும். இதில் நவீன மருத்துவ இனங்காணல் தொழில்நுட்ப வசதிகள் காணப்படுவதுடன், உயர் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளன. இலங்கையின் கிராமிய மற்றும் நகர்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், புத்தாக்கமான மற்றும் நோயாளரை அடிப்படையாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகளையும் வழங்குகின்றது. உயர் தரம் வாய்ந்த பராமரிப்பு சேவைகளை பரிபூரணமாகவும், ஒன்றிணைக்கப்பட்ட வைத்தியசிகிச்சைகளினூடாகவும் வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்தியேகமான பராமரிப்பு கவனிப்பையும் வழங்குகின்றது. 70 படுக்கைகளைக் கொண்ட பல்துறைசார் சிகிச்சைகளை வழங்கும் இந்த வைத்தியசாலை, இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்திடுமிருந்து சுகாதார பராமரிப்புக்காக ஐளுழு 9001:2015 சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதல் வைத்தியசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...