குழந்தைகளுக்கான முதலாவது ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றி

இலங்கையில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை  தெரிவித்துள்ளது.

ராகமை ஈரல் மாற்று சத்திரசிகிச்சை குழுவுடன் இணைந்து, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களினால் இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட சத்திரசிகிச்சை  நிபுணர், வைத்தியர் ரொஹான் சிறிவர்தனவும், அவருடன் நாடளாவிய ரீதியிலுள்ள விசேட சத்திரசிகிச்சை நிபுணர்களும் இணைந்து கடந்த 14ஆம் திகதி இச்சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமியொருவருக்கு  மேற்கொள்ளப்பட்ட இச்சத்திரசிகிச்சை 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்தது. குறித்த சிறுமியின் ஈரல் இயக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பை (Chronic Cirrhosis)  தொடர்ந்து, அச்சிறுமியின் தாயிடமிருந்து பெறப்பட்ட ஈரலின் பகுதியிலிருந்து குறித்த ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிருள்ள ஒருவரிலிருந்து ஈரல் எடுக்கப்பட்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வைத்தியசாலையில் வயதானவர்களுக்கான ஈரல் பொருத்தும் 50 சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் முதற் தடவையாக சிறுமி ஒருவருக்கு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொட ர்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிபுணர்கள் குழு செய்தியாளர்கள் மாநாடொன்றை நடத்தி அது தொடர்பில் தெரிவிக்கையில் :

சிறு வயது முதலே ஈரல் பாதிப்பினால் கஷ்டப்பட்ட நிஷானு என்ற சிறுமி யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் கஷ்டமான கிராமமொன்றைச் சேர்ந்தவர்.

அவரது 38 வயதான தாயார் அது தொடர்பில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் சிறுவர்களுக்கு ஈரல்

பொருத்தக் கூடிய பிரிவுகள் இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டாக்டர்கள் துஷாந்தன் மற்றும் கே. அருள்மொழி ஆகியயோர் மேற்படி சிறுமியை கொழும்பு வடக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்து வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தது.


Add new comment

Or log in with...