ஈரான் பயணிகள் விமானத்தை நெருங்கி அச்சுறுத்திய அமெரிக்க போர் விமானம் | தினகரன்

ஈரான் பயணிகள் விமானத்தை நெருங்கி அச்சுறுத்திய அமெரிக்க போர் விமானம்

சிரிய வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் ஒன்றை அமெரிக்க போர் விமானம் ஒன்று அபாயகரமான வகையில் நெருங்கி வந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

இதனால் மஹன் ஏயார் விமானம் தனது பயணப்பாதையை விரைவாக மாற்றியதால் பல பயணிகளும் காயம் அடைந்ததாக ஈரானின் இரிப் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பயணி ஒருவரின் முகத்தில் இரத்தம் கொட்டுவது மற்றும் போர் விமானம் ஒன்று நெருங்கி வருவதை விமானத்தின் ஜன்னல் ஊடாக காண்பிக்கும் வீடியோக்களை இரிப் வெளியிட்டுள்ளது. 

எனினும் எப்-15 ஜெட் விமானமானது பாதுகாப்பான இடைவெளியுடனேயே இருந்ததாக அமெரிக்க இராணுவம் பின்னர் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க விமானப்படை கெப்டன் பில் அர்பன்; பிற்பாடு கூறும்போது, அமெரிக்க எப்-15 ரக போர் விமானம் வழக்கமான முறையில்தான் மஹன் ஏர் பயணிகள் விமானத்தைக் காண்காணித்தது. 1000 மீற்றர்கள் தள்ளித்தான் பறந்தது என்றார்.

ஈராக் மற்றும் ஜோர்தான் எல்லைக்கு அருகில் உள்ள அல் தன்ப் அமெரிக்க இராணுவத் தளத்தில் இருக்கின்ற இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பயணிகள் விமானம் தனது பயணப்பாதையில் டெஹ்ரானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

இதில் விபத்து நேர்ந்திருந்தால் மக்கள் உயிருக்கு அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஈரான் சாடியுள்ளது.


Add new comment

Or log in with...