தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு | தினகரன்


தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு-COVID19 Patient Escaped From IDH Found at National Hospital

- மீண்டும் IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் (OPD) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கும் அடிமையான, குற்றச் செயல் தொடர்பிலான சந்தேகநபரான குறித்த நபர், இன்று (24) அதிகாலை ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரைக் கண்டுபிடிக்க, பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.

இந்நிலையில், இராணுவ புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் OPD யில் வைத்து கண்டுபிடிக்க முடிந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை, மீண்டும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றவர், திருகோணமலையின் வள்ளிமலரைச் சேர்ந்த, 41 வயதான எல்சியாம் நசீம் என அழைக்கப்படும், மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவராவார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (24) அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதேவேளை, குறித்த நபரை கண்டுபிடிக்க உதவிய, இராணுவ புலனாய்வு பிரிவினர், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிக்குழாம், ஊடகங்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பதில் பொலிஸ் மாஅதிபர் தனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...