குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக தடையுத்தரவு | தினகரன்

குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக தடையுத்தரவு

குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக தடையுத்தரவு-குருணாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக தடையுத்தரவு-AG Obtains Prevention Order Against Kurunegala Mayor
இடிக்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் சிறப்புமிக்க 2ஆம் புவனேகபாகு கட்டடம் | குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண

தகர்க்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் கட்டடப் பகுதிக்குள் நுழைவதற்கு, குருணாகல் மாநகரசபை மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் புவனேக ஹோட்டலினால் பராமரிக்கப்பட்டு வந்த, தொல்பொருள் திணைக்களத்தின் கீழுள்ள கட்டடத்தை இடித்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய, குறித்த  இடிபாட்டு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் குறித்த நீதிமன்றத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட குறித்த கோரிக்கைக்கு அமைய, குருணகால் நீதவான் நீதிமன்றத்தினால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாநகர சபை மேயர், பிரதி மேயர், மாநகரசபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் யாரும் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடிபாடுகளுடன் கூடிய பகுதியை பாதுகாப்பதற்கும், அதற்குள் நுழைவதற்கும் தடையுத்தரவொன்றை சட்ட மாஅதிபர் கோரியதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பாளர், அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கட்டடம் தொடர்பில் புத்தசான மற்றும் கலாசார விவகார அமைச்சர் எனும் வகையில் பிரதமரின் ஆலோசனையின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, தனது அறிக்கையை நேற்றையதினம் (22) பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொல்பொருள் மதிப்புடைய கட்டமல்ல என, குறித்த கட்டடத்தை தகர்ப்பதற்கு உத்தரவிட்ட, குருணாகல் மாநாகர சபை மேயர்,  துஷார சஞ்ஜீவ விதாரண அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...