6 வகை கொரோனா தொற்றுகள் அடையாளம் | தினகரன்

6 வகை கொரோனா தொற்றுகள் அடையாளம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள் அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்களில் 6 வகையான தனித்துவமான இனங்களை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப எந்தவகை வைரஸ் தாக்கியுள்ளது என்பதையும் கண்டறிய இயலும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை பொதுவாக நோயின் மூன்று முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும் தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, குழப்பம், பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் சில புதிய அறிகுறிகளையும் கொரோனா நோயாளிகளிடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதல் வகையான காய்ச்சலற்ற நிலையில் தலைவலி, வாசனை இழப்பு, தசை வலி, இருமல், தொண்டைப் புண், நெஞ்சுவலி போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது. 2ஆவது வகையான காய்ச்சலுடன் கூடிய அறிகுறியில் தலைவலி, வாசனை இழப்பு, இருமல், தொண்டைப் புண், காய்ச்சல் மற்றும் பசியின்மை ஏற்படும்.

3 ஆவது வகையில் ஏற்கனவே இருக்கும் அறிகுறிகளுடன் பசியின்மையுடன் வயிற்றுப் போக்கும் காணப்படும். 4ஆவது வகையான கடுமையான நிலை ஒன்றில் மேற்கூறிய அறிகுறிகளுடன் உடல் சோர்வு ஏற்படும்.

5ஆவது நிலையான கடுமையான நிலை 2இல் பழைய அறிகுறிகளுடன் மனக்குழப்பம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகக் கடுமையான 3ஆம் நிலையில் பழைய அறிகுறிகளுடன் பசியின்மை, மனக்குழப்பம், மூச்சுத் திணறல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி உள்ளனர்.


Add new comment

Or log in with...