சதொசவிற்கு SLT யிடமிருந்து ஒன்லைன் விற்பனை தொழில்நுட்ப உதவிகள்

சதொசவிற்கு SLT யிடமிருந்து ஒன்லைன் விற்பனை தொழில்நுட்ப உதவிகள்-SLT Contributes with Technology Support to Create Online Store for Sathosa
இடமிருந்து: பிரவீன் இவான் (சுப்ரீம் குளோபல் ஹோல்டின்ஸ் நிறுவனத்தின் பிரதம குழும தொழில்நுட்ப அதிகாரி/SLT யின் மென்பொருள் அபிவிருத்திப் பங்காளி) ஆர்.எம். மணிவன்னன் (சுப்ரீம் குளோபல் ஹோல்டின்ஸ் நிறுவனத்தின் தலைவர்), அனுஷ்க பஸ்தியன் (லங்கா சதொச வின் தகவல் தொழில்நுட்ப உதவி முகாமையாளர்), நுஷாட் எம் பெரேரா (லங்கா சதொச வின் தலைவர்), ரொஹான் பெர்னாண்டோ (தலைவர் - SLT), லலித் செனவிரத்ன (SLT குழும பிரதம நிறைவேற்று அதிகாரி), கித்தி பெரேரா (SLT பிரதம நிறைவேற்று அதிகாரி)

சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு பின்னணி வழங்கும் வகையில், லங்கா சதொச லிமிட்டெட் நிறுவனம், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் சில்லறை விற்பனை நிலைய தளம் ஒன்றை நாட்டின் மிகப்பெரிய அரச சில்லறை விற்பனை வலையமைப்பின் ஊடாக உருவாக்குகிறது.

இக்காலத்தின் கட்டாயத் தேவையாகக் காணப்படும் இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டின் முன்னணி ICT மற்றும் டிஜிட்டல் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனம் என்ற வகையில் SLT, லங்கா சதொச வின் ஒன்லைன் இணைய தளத்தை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் முகாமைத்துவப்படுத்துதல் ஆகிய சகல தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க முன் வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) லங்கா சதொச லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் எம் பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் குழுமத் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

SLT யின் தொழில்நுட்ப அனுபவம் மூலம், சதொச நிறுவனத்திற்கு மிகச் சிறந்த, செயற்திறன் மிக்க ஒன்லைன் தளம் ஒன்றை உருவாக்குவதற்கும், அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கான இந்த இணைய தளத்தில் தங்களைத் தாமே பதிவு செய்து கொள்ளவும், OTP ஊடாக தம்மைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்ளவும், மின்னஞ்சல்கள் மூலம் அல்லது கையக்கத் தொலைபேசி இலக்கம் ஊடாக தமது கணக்கிற்குள் பிரவேசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இணைய தளத்தில் ஷொப்பிங் காட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதனால், வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய பொருட்களைத் தெரிவு செய்து, இறுதியில் பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய முகவரியைப் பெற்றுக் கொடுத்தவுடன், கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இணைய தளத்தின் மூலம் பல்வேறு வகையான கொடுப்பனவு முறைகளுக்கான வசதிகளும் உள்ளன. இவற்றில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது பணம் செலுத்துதல், வங்கியிலிருந்து நேரடியாக பணப் பரிமாற்றம் மற்றும் கடன் அட்டைகள் மூலமாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு இலகு முறைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு சதொச விற்பனை நிலையத்திற்கும், தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள விற்பனை இணைய தளப் பிரிவில் அவர்களிடமுள்ள பொருட்களை இற்றைப்படுத்தவும், புதிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை அவற்றில் குறிப்பிடவும், விலைகளை அவற்றில் மாற்றம் செய்யவும், சலுகைகள், விலைக்கழிவுகள், ஊக்குவிப்புத் திட்டங்கள் பற்றிய விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் விற்பனையாளர் பிரிவு ஊடாக முடியுமாகிறது. மேலும், இந்தச் செயற்பாடுகளை Android App ஒன்றின் மூலம் மேற்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொருட்களை விநியோகம் செய்வதற்கான தகவல்களை குறித்த விநியோக முகவருக்கு, இந்த இணைய தள மென்பொருள் ஊடாகவே பரிமாற்றம் செய்யப்படுவதனால், வாடிக்கையாளர்கள் தமது பொருட்கள் எந்த நிலையில் உள்ளது என்ற வசதிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் திரு. நுஷாட் எம் பெரேரா இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிடுகையில், ‘லங்கா சதொச நிறுவனமானது. SLT யுடன் கைகோர்ப்பதில் பெருமையடைகிறது. இலங்கைக்கு ஒரு புதிய ஈ வர்த்தக தொழில்நுட்பத்தை பாரிய அளவில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாக இது அமைகிறது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இரு நிறுவனங்களுக்கும் பெருமளவு நன்மைகள் கிடைக்கும் என்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்’ என்று கூறினார்.

இந்தப் புதிய நடவடிக்கை பற்றி ஸ்ரீலங்கா ரெலிகொம் குழுமத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘தேசிய தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தீர்வு வழங்குநர் என்ற வகையில், SLTஇ லங்கா சதொச வுடன் இணைந்து இந்த சில்லறை வர்த்தகத்தை ஒன்லைன் நிலைக்கு இட்டுச் செல்வதில் பெருமையடைகிறது. இதுவே எதிர்காலத்திற்குரிய புதிய செயற்பாடாக காணப்படும். ஏற்கனவே நாம் எதிர்நோக்கிய தொற்று நோய் ஒன்றின் போது காணப்பட்ட தேவைப்பாடுகள் போன்றே எதிர்காலத்திலும் டிஜிட்டல் தளங்களுக்கு எமது செயற்பாடுகளைப் பரிமாற்றம் செய்வதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம். எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவி புரிவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பொது மக்களுக்கு செயற்திறன் மிக்க சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக எமது தொழில்நுட்ப சக்திகளை நாம் வழங்குவது எமக்கு மேலும் பெருமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், ‘SLT நிறுவனம், குறித்த ஒன்லைன் சில்லறை விற்பனைத் தளத்தை ஐந்து வருடங்களுக்கு முகாமைத்துவம் செய்யவும், மேற்பார்வை செய்யவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்;து ஒப்பந்தத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் தேசியத் தேவைப்பாடுகளுக்காக உதவுவதே எமது முக்கிய குறிக்கோளாகும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...