கொரோனா தொற்றிய 906 கடற்படையினரும் குணமடைவு

கொரோனா தொற்றிய 906 கடற்படையினரும் குணமடைவு-All Navy Personals Recovered

- 3 மாதங்களின் பின்னர் கடற்படைக்கு ஏற்பட்ட தொற்று நிறைவு
- கடற்படை தொற்றினால் இலங்கையில் 950 பேருக்கு தொற்று
- இறுதியாக கடந்த ஜூலை 08 ஆம் திகதி 906 ஆவது நபர் அடையாளம்
- இதுவரை கடற்படையினர் 15,598 பேருக்கு PCR சோதனை

கொவிட்-19 தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படை உறுப்பினர்களும் பூரண குணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையைச் சேர்ந்த கடைசி 03  உறுப்பினர்களும் நேற்றையதினம் (20) குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில், கொரோனா தொற்று தொடர்பில் போதைக்கு அடிமையான நபர் ஒருவரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காகச் சென்ற கடற்படையைச் சேர்ந்த வீரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

குறித்த நபருக்கு பின்னர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. 206 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபரைத் தொடர்ந்து, குறித்த பணிக்காகச் சென்ற கடற்படையைச் சேர்ந்த கடற்படை வீரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி, வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை உறுப்பினர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கடற்படை உறுப்பினருடன் அதே உறைவிடம் மற்றும் அலுவலக இடங்களைப் பகிர்ந்துகொண்ட ஏனைய கடற்படை உறுப்பினர்களும் மற்றும் அவருடன் தொடர்பை பேணிய  அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, PCR  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் முதலாம் நபர் உள்ளிட்ட 30 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதன் காரணமாக வெலிசறை கடற்படை முகாமும்  தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 23 வரை 2 மாதங்களுக்கு மேலாக வெலிசறை கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வெலிசறை முகாமில் கடற்படையைச் சேர்ந்த 906 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்ததோடு, இறுதியாக கடந்த ஜூலை 08 ஆம் திகதி 906 ஆவது கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களுடன் தொடர்புபட்ட 44 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. அதற்கமைய, கடற்படையினர் 906 பேர் உள்ளிட்ட 950 பேர் கடற்படை கொரோனா பரவல் காரணமாக அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட கடற்படையினர் அனைவரும், கடற்படை வைத்தியசாலை, வெலிக்கந்தை வைத்தியசாலை, ஐடிஎச் வைத்தியசாலை, மினுவாங்கொடை வைத்தியசாலை, தெல்தெனிய வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை கடற்படையினர் 15,598 பேருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் அப்பணிகள் தொடர்வதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குணமடைந்த கடற்படை உறுப்பினர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

இறுதியாக குணமடைந்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் இரணவில வைத்தியசாலையிலிருந்து நேற்றையதினம் குணமடைந்து வெளியேறியதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.


Add new comment

Or log in with...