திடீர் மூச்சுத் திணறல்; ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி | தினகரன்

திடீர் மூச்சுத் திணறல்; ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் கொரோனோ  தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பொலிவூட்  நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று  இருப்பது கடந்த13ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

வைரஸ் அறிகுறிகள் சிறியளவில் இருந்ததால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகமானதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, இவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...