கைது முயற்சிகளை தடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

கைது முயற்சிகளை தடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்-Rishad Bathiudeen FR Petition-Arrest Against Easter Sunday Attack Incident

- "அடிக்கடி விசாரணை; தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமம்" எனத் தெரிவிப்பு
- ஏற்கனவே வன்னி வாக்காளர்களுக்கு போக்குவரத்து செய்தமை தொடர்பில் மனு

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரென்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, எனது தேர்தல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன். இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

என்னை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், நாடாளாவிய ரீதியில் எமது கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான, இன்ஷாப் அஹமட்டின் "கொலொஸஸ்" நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை பற்றி விசாரிக்கவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரை அழைத்துள்ளதாகத் தெரியவருவதாக, ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


Add new comment

Or log in with...