அங்குலானையில் பதற்றம்; பொலிஸ் நிலையத்தை தாக்கியோர் விரட்டியடிப்பு | தினகரன்


அங்குலானையில் பதற்றம்; பொலிஸ் நிலையத்தை தாக்கியோர் விரட்டியடிப்பு

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டது. பிரதேசவாசிகள் சிலர் பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதோடு பொலிஸார் கண்ணீர்ப்புகை  வீசி கூட்டத்தை கலைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

மொறட்டுவை – லுணாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த 10 ஆம் திகதி அங்குலான பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரதேச வாசி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குவிசாரணை நேற்று நடந்த போது விசாரணைகளை சி.ஐ.டிக்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.விசாரணை 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட 75 முதல் 100 பேர் வரையான குழுவினர் பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகித்துள்ளனர்.

தாக்குதலில் பொலிஸ் நிலைய பெயர்ப்பலகை, ஜன்னல் கண்ணாடிகள் என்பன சேதமடைந்துள்ளன. நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை வரவழைக்கப்பட்டதாக அறிய வருகிறது. (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...