கொன்று புதைத்து விட்டார்கள் என நினைத்தேன் | தினகரன்


கொன்று புதைத்து விட்டார்கள் என நினைத்தேன்

உலகக் கிண்ணத்தை வென்ற பரபரப்பான நிமிடங்கள் பற்றி இங்கிலாந்து தலைவர்!

கடந்த வருடம் இதே நாளில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து அணி. பரபரப்பான முறையில் இறுதிச்சுற்றை வென்றது குறித்து இங்கிலாந்து தலைவர் தனது எண்ணங்களைக் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் 23-ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் நியூஸிலாந்து அணியை அதிக பவுண்டரிகள் அடித்ததன் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்தின் 44 ஆண்டுகள் கனவு நனவானது. லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டையும் இழந்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ஓட்டங்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ஓட்டங்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கிண்ண போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து. உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் 98 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 10 ஆட்டங்களில் 578 ஓட்டங்கள் எடுத்து, தனது அணியை நன்கு வழிநடத்தி 2-ம் இடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த நியூஸிலாந்து தலைவர் கேன் வில்லியம்சனுக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

கடந்த வருடம் இதே நாளில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது குறித்து க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் கூறியதாவது: ஒரே ஒரு தருணத்தில் தான் நம்மால் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என சந்தேகப்பட்டேன். நாங்கள் 2-வதாக பேட்டிங் செய்தபோது 49-வது ஓவரை வீசினார். அப்போது சிக்ஸர் அடிக்க முயன்றார் ஸ்டோக்ஸ். பந்து மிகவும் உயரமாகப் பறந்தது. உயரமாகச் சென்றதே தவிர தூரமாகச் செல்லவில்லை. ஒரு நொடியில், கதை முடிந்தது என நினைத்தேன். ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தால் இன்னும் நமக்கு 15 ஓட்டங்கள் தேவை. நம்மைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என எண்ணினேன் என்றார். அப்போது, பிடியை பிடிக்க முயன்ற போல்ட் எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டதால் அதை சிக்ஸர் என அறிவித்தார் கள நடுவர். இதனால் 9 பந்துகளில் 22 ஓட்டங்கள் என்று இருந்த நிலை மாறி 8 பந்துகளில் 16 ஓட்டங்கள் என மாறிப்போனது. கடைசியில் ஆட்டம் டை ஆகி, சூப்பர் ஓவர் வரை சென்று இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வென்றது.   


Add new comment

Or log in with...