டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - மேற்கிந்திய தீவு தலைவர் ஹோல்டர் முன்னேற்றம் | தினகரன்


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - மேற்கிந்திய தீவு தலைவர் ஹோல்டர் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மேற்கிந்திய தீவு தலைவர் ஹோல்டர் முன்னேற்றம் வகிக்கிறார்.  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்றுமுன்தினம் வெளியிட்டது.  

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் லபுஸ்சேன் 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். 

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கம்மின்ஸ் (அவுஸ்திரேலியா) 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.  

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய மேற்கிந்திய தீவு தலைவர் ஜாசன் ஹோல்டர் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.  

32 புள்ளிகளை கூடுதலாக பெற்றதால், அவரது தரவரிசைப் புள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது. இது அவரது சிறந்த தரவரிசை மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவு பந்துவீச்சாளர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியும் இதுதான். 

இதே டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்று மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே (7-வது இடம்) அங்கம் வகிக்கிறார்.   


Add new comment

Or log in with...