அங்குலானை பொலிஸ் நிலையம் முன்பாக அமைதியின்மை | தினகரன்


அங்குலானை பொலிஸ் நிலையம் முன்பாக அமைதியின்மை

- கண்ணீர்ப்புகை தாக்குதல்

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பொலிஸ்நிலையம் மீது கற்களை வீசியதாகவும் அதனை தொடர்ந்து அவர்களை கலைக்க கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றதோடு, இது தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர், பிற்பகல் இரண்டு முப்பது மணி அளவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 75 - 100 பேர் அங்குலானை பொலிஸ் நிலையம் முன்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு கற்களை வீசியதாகவும் இதில் பொலிஸ் நிலைய பெயர் பலகை மற்றும் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, கடமையில் இருந்த குறித்த பொலிசார் போதையில் இருந்ததாக, சம்பவத்தின் போது உடனிருந்த மரணித்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்களுடன் வந்த மரணித்தவரின் மகனான சிறுவன் ஒருவன் மீதும் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...