உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது - ஐசிஎம்ஆர்

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வரிசையில் முக்கிய இடம் வகிக்கிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை விரைவாக கண்டறியும் பணியில் இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இந்தியாவில் இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. எலிகள், முயல்கள் போன்ற விலங்குகளில் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதன் தரவுகள் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த இரண்டு மருந்துகளுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

தற்போது, பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் தன்னார்வலர்களிடம் மருத்துவ பரிசோதனையை செய்து வருகின்றனர். இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் ஆரம்ப கட்ட பரிசோதனகளை செய்ய முயற்சித்து வருகிறார்கள். பிற நிறுவனங்களின் தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய சோதனைகள் மும்முரமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனைகளில் நிபுணர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். முடிந்த வரை துரிதமாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை தார்மீக கடமையாக கொண்டு செயலாற்றி வருகின்றனர்.  

கொரோனா தொற்று பாதிப்பால் உலக அளவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனா தொற்றுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் மிகவும் முக்கியமானது ஆகும். ரஷ்யா, சீனா போன்ற மிகப்பெரிய நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆரம்ப கட்ட பணியில் வெற்றியடைந்துள்ளது. இந்தியாவும் சீனாவும் தடுப்பூசி உற்பத்தியில் உலகில் முன்னணி வகிக்கிறது.

இந்தியா 60 சதவீத தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது. வளர்ந்த நாடுகள் அனைத்திற்கும் இது தெரியும். உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.  


Add new comment

Or log in with...