வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது

- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்பு

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபரை நேற்று (14) தெல்தெனிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

காலியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற விகாரைகளிலுள்ள தேரர்கள் மற்றும் பிரபலமானவர்களின் பெயர்களை பயன்படுத்தி, ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி 53 இலட்சத்து 79 ஆயிரத்து 900 (ரூ.5,379,900) ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், கண்டி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால், நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய, இரு புனைப்பெயர்களில் தன்னை அடையாளப்படுத்தி வந்த இச்சந்தேகநபர் நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டிருந்தார்.

இச்சந்தேகநபர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் வத்தேகம, மாத்தறை, அநுராதபுரம், பெலிஅத்த, மத்துகம, ஹிக்கடுவை, மீட்டியாகொட, மீரிஹான, தெல்தெனிய, பலாங்கொடை, தம்புள்ளை, தலங்கம, கந்தானை, அலுத்கம, நாராஹேன்பிட்டி, மினுவாங்கொடை, சபுகஸ்கந்த, நவகமுவ, கெக்கிராவை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சந்தேகநபர், பத்திரிகைகளில் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து, இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...