நான் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் இல்லை

தமிழ் தேசியத்திற்கு எதிராவன் அல்ல. எமது இருப்பை தக்க வைக்க தமிழ் தேசியக் கட்சிகள் வெல்ல வேண்டும். ஆனால் அந்த இருப்புக்கு அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் அபிவிருத்தியும் வேண்டும். அதனை பெற்றுக் கொடுக்கவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் தங்கவேலு பகீரதன் தெரிவித்தார்.

தினகரன் நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு,

கேள்வி: கொவிட் - 19 இன் தாக்கம் குறையாத இந் நிலையில் தேர்தல் தொடர்பில் மக்களின் மனநிலை எப்படியுள்ளது?

பதில்: கொவிட் -19 தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் மக்களது மனங்களில் அச்ச நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்களும் தமது பிரசாரத்தை சரியாக கொண்டு செல்ல முடியவில்லை.

எனினும் இந்த நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாக விரைவாக தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய தேவையுள்ளது. மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வம் காட்டும் தன்மை குறைவாக இருக்கின்ற போதும், நாட்டு நிலமையை கருத்திற்கொண்டு தமது இறைமையாகிய வாக்குரிமையை சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: தாங்கள் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினராக இருந்த நிலையில் அதில் இருந்து விலகி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக் காரணம் யாது?

பதில்: எனது பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் என்னால் முடிந்தளவு சேவைகளை மக்களுக்கு வழங்கினேன். ஆனால் பிரதேச சபை ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மட்டுப்பாடுகளை கொண்டவை.

எமது வன்னிப் பிரதேசம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்குள்ள மக்கள் ஆறாத வலிகளையும், பல்வேறு துன்பங்களையும், இழப்புக்களையும் சுமந்தவர்கள். அந்த வலிகளையும், துன்பங்களையும் நானும் சுமந்ததுடன், அதனை நேரே கண் கூடாகவும் பார்த்தேன். இதனால் எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதேச சபை உறுப்பினராகிய என்னால் முழுமையாக முடியாது.

அதனால் மக்களது கோரிக்கைக்கு அமைவாக இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் வன்னி மண்ணிற்கு உரிமையற்றவர்களாகவும், வன்னியில் வலிகளை சுமக்காதவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் வன்னி மண்ணிற்கு உரித்தான நான் ஏன் போட்டியிடக் கூடாது என சிந்தித்தேன். மக்களும் கேட்டதால் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

கேள்வி: சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேச சபைக்கு தெரிவான தாங்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடக் காரணம் என்ன?

பதில்: ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைமைத்துவம். இன, மத பேதமின்றி செயற்படக் கூடியவர். நாட்டில் உளள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் அவருடன் தான் நிற்கின்றன. அதனால் நானும் இந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றேன்.

அத்துடன் வன்னி மாவட்ட மக்கள் 30 வருட கால யுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள். யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கபடவில்லை. வாழ்வாதாரத்திற்காக முன்னாள் போராளிகள் உட்பட பல குடும்பங்கள் போராடுகிறார்கள்.

தமிழ் தேசிய கட்சிகள் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. இதனால் தென்னிலங்கையில் ஆட்சியமைக்க கூடிய அதேவேளை, சிறுபான்மை சமூகம் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடுகின்றேன்.

கேள்வி: தாங்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிப்பவராக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தெரிவித்திருந்தீர்கள். தற்போது தென்னிலங்கையின் தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட காரணம்?

பதில்: நான் தமிழ் தேசியத்திற்கு எதிராவன் அல்ல. எமது இருப்பை தக்கவைக்க தமிழ் தேசியக் கட்சிகள் வெல்ல வேண்டும். ஆனால் அந்த இருப்புக்கு அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் அபிவிருத்தியும் வேண்டும். அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படா விட்டால் மக்கள் பாதிப்படைவார்கள்.

அதன்பின் பெறப்படும் தீர்வு எவருக்கு என்ற கேள்வி எழுகிறது. அதனால் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் தீர்வுக்காக முயற்சிக்க, நான் அபிவிருத்தி நோக்கி மக்களை நகர்த்தவுள்ளேன். இரண்டும் இரு சமாந்தரங்களாக மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் நான் ஐக்கிய மக்கள் சக்தியாக இருந்தாலும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து குரல் எழுப்புவேன்.

கேள்வி: கடந்த காலங்களில் வன்னி மக்களுக்கு தாங்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன?

பதில்: அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நான் எமது பிரதேசத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கின்றேன். அதனை விரிவுபடுத்தும் முகமாக மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். நான் செய்த சேவைக்காகவும், என்மேல் மக்கள் கொண்ட நம்பிக்கைகாகவும் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதன்பின் எனது வட்டாரத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபை ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முடிந்தளவு சேவைகளை செய்தேன்.

ஆனால் உள்ளூராட்சிமன்ற எல்லைக்குள் செய்த சேவைகளை முழு வன்னிக்கும் செய்வதற்கும், வன்னிக்காக குரல் கொடுப்பதற்குமாக தற்போது மக்கள் ஆணையை கோரியுள்ளேன்.

கேள்வி: வன்னியில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். அவர்களுடனான தொடர்பு எவ்வாறு உள்ளது?

பதில்: நான் தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், மூவின மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் சமத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உடையவனாகவே உள்ளேன்.

இதனால் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. மூவின மக்களும் தந்த உற்சாகத்தால் தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் போட்டியிடும் கட்சி கூட தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சி. ஆகவே மூவின மக்களின் ஆதரவும், அவர்களுடைய தொடர்பும் எனக்கு அரசியலுக்கு வர முன்பிருந்தே உள்ளது. எனவே, என்னை மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் இன, மத, மொழி பேதமின்றி நியாயத்திற்காக குரல் கொடுப்பேன்.

கேள்வி: வன்னி மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?

பதில்: வன்னி பிரதேசம் முழுமையாக யுத்தத்தால் பாதிப்படைந்த பிரதேசம். இங்குள்ள மக்கள் மீன்பிடி, விவசாயம், வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், காணி உறுதிப்பத்திரம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், படித்த இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றியும் கஸ்ரப்படுகின்றார்கள். போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள்.

கேள்வி: நீங்கள் கூறிய இப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்ன?

பதில்: தன்னாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கொவிட் -19 தாக்கம் காரணமாக தற்போது சுயசார்ப்பு பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர்.

இதனை அரச உதவியுடன் மேலும் வலுப்படுத்தினால் மக்களின் வாழ்வாதார, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். நான் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதால் எமது கட்சி ஆட்சி அமைத்ததும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திகளையும், உதவிகளையும் நேரடியாக பெற்று மக்களது  பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நம்புகின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு தமிழ் பிரதிநிதியாக என்னை மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் எமது கட்சி ஆட்சியமைக்கா விட்டாலும் ஒரு மக்கள் பிரதிநிதியாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற முடியும்.

இதனால் எமது ஐக்கிய மக்கள் சக்தியின் ரெலிபோன் சின்னத்திற்கும் எனது இலக்கம் இரண்டிற்கும் வன்னி மக்கள் ஆணை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: ஐக்கிய மக்கள் சக்திக்கு வன்னியில் வரவேற்பு எவ்வாறு உள்ளது?

பதில்: நான் பொதுத்  தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின் 200 இற்கு மேற்பட்ட வன்னியின் கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு எமக்கானதும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமான வரவேற்பு அதிகமாகவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வன்னி மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

யுத்தம் காரணமாக வீடிழந்து வாழ்ந்த பல குடும்பங்களுக்கு சஜித் பிரேமதாச அமைச்சாராக இருந்த போது வீட்டுத்திட்டங்களை வழங்கி அவர்களது வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் அவரை ஜனாதிபதியாக்க மக்கள் முனைந்தார்கள். ஆனால் அப்போதைய தென்னிலங்கை நிலவரத்தால் அது முடியாமல் போய்விட்டது.

ஆனால் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளமையால் பிரதமராக்குவதற்கு அவர்கள் முயல்கிறார்கள்.

ஆகவே எமக்கான ஆணையை மக்கள் தருவார்கள். எமது கட்சி சார்பாக வன்னியில் இருந்து இருவருக்கு மேல் தெரிவாகி ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு வழிசமைப்பார்கள். இது மக்களின் ஆணையால் கிடைக்கும்.

நேர்காணல்-: கி.வசந்தரூபன்


Add new comment

Or log in with...