நாம் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது சமயோசிதமான அரசியல் | தினகரன்


நாம் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது சமயோசிதமான அரசியல்

சமயோசித அரசியலை சரணாகதி அரசியலாகாக் கருதும் நிலைப்பாடுகளைக் கைவிட வேண்டிய காலமாற்றத்துக்குள் சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் அஷ்பர் தெரிவித்தார். தினகரனுக்கு அவர் வழங்கிய விஷேட பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். 

கேள்வி. முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் கோட்டைகளாகவுள்ள அம்பாறை மாவட்டடத்தில் பெரும்பான்மைக் கட்சியில் நீங்கள் போட்டியிட தீர்மானித்ததன் நோக்கம் என்ன? 

பதில். தனித்துவ கட்சிகள் எனக் கூறப்படும் இன்றைய முஸ்லிம் தலைமைகள் பெயரளவில்தான் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன.மாறாக இவர்களின் அரசியல் இணக்கப்பாடுகள் மறைமுகமாகவும் இரகசியமாகவும் ஏதாவதொரு பெரும்பான்மை அரசியல் கட்சியுடன் இணைந்தேயிருக்கின்றன. இதைக் கருதியே நான் நேரடியாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுகிறேன்.மேலும் முஸ்லிம் தனித்துவத்தின் மூலக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இங்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துதான் போட்டியிடுகிறது.எனவே தொலைபேசிச் சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் எந்தளவு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்று தரும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைப் பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த நீங்கள்,அந்தக் கட்சியிலிருந்து விலகியதிலுள்ள பின்னணி என்ன? 

பதில். சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சி சிறுபான்மைத் தலைமைகளின் தயவில் ஆட்சியமைக்கும் அரசியல் கலாசாரத்தை இல்லாமலாக்கி விட்டது.கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் இதனையே காட்டுகின்றன.ராஜபக்ஷக்களின் தலைமைகள்தான் இந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.எனவே தென்னிலங்கையின் இந்த மாற்றங்கள்,மனநிலைகளைப் புரிந்துதான் தனித்துவ தலைமைகள் தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். எனினும் அவ்வாறு செய்யாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிமைச்சாசனம் எழுதியதைப் போன்று முஸ்லிம்களின் தனித்துவ கட்சிகளை இவர்கள் அங்கு அடகு வைத்து விட்டனர்.இதுதான் தென்னிலங்கைச் சமூகத்தை விழிப்பூட்டியள்ளது. இந்நிலைமைகளை மாற்றி தென்னிலங்கையில் இன்று பெரும் சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்க வேண்டியுள்ளது.அங்குள்ள சுமார் 17 இலட்சம் முஸ்லிம்களைப் பாதுகாக்க இன்றுள்ள வழியாக இதைத் தவிர வேறெதையும் காண முடியவில்லை. 

கேள்வி: அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன எத்தனை ஆசனங்களைப் பெறும் நிலையிலுள்ளது. 

பதில்.நான்கு ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவு,சிறுபான்மைக் கட்சிகளிடையே நிலவும் குத்துவெட்டுக்கள்,ஒற்றுமையீனங்கள் எமக்குச் சாதகமான களநிலவரத்தையே ஏற்படுத்தி வருகின்றன.மேலும் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியுறப் போவது உறுதியாகியுள்ளதால் மக்களும் எதிர்க்கட்சியை ஆதரித்து எதுவும் பயனில்லை என்பதையும் தெரிந்து விட்டனர்,இன்னும் இருபது வருடங்களுக்கு ஆட்சியிலிருக்கப் போகும் அரசாங்கத்தை புத்தியுள்ள எவர்தான் எதிர்க்கத் துணிவர்?இவ்வாறு வெல்லப்படும் நான்கு ஆசனங்களில்,நிச்சயமாக ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். 

கேள்வி: முஸ்லிம் தலைமைகளுக்கு இன்று அம்பாறை மாவட்டத்தில் பெரும் சவாலாகியுள்ள சாய்ந்தமருது பிரதேச சபையை உங்களால் வென்றெடுக்கலாமென கருதுகின்றீர்களா? 

பதில்: நம்பிக்கைதான் வாழ்க்கை,எந்த விடயங்களையும் நம்பிக்கை வைத்தே நாம் முயற்சிக்கிறோம்,இது தொடர்பில் நாம் ராஜபக்ஷ சகோதரர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம்.இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முஸ்லிம்கள் அமோக வாக்களித்து ராஜபக்ஷக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினால் இதை வென்றெடுக்கலாம் எனக் கருதிகிறேன். 

கேள்வி: அரசாங்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன உள்வாங்கப்படுமா?அவ்வாறு உள்வாங்கப்படுவதை நீங்கள் விரும்பவீர்களா? 

பதில்: இவ்விடயம் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரின் நிலைப்பாட்டில்தான் தங்கியுள்ளது.பொதுவாக இதில் ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறலாம்.ராஜபக்ஷ குடும்பத்தினர் சொன்னதைச் செய்பவர்கள்,செய்வதைச் சொல்பவர்கள். இத்தலைமைகள் அரசாங்கத்தில் இணைக்கப்படப் போவதில்லை,இவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதுமில்லை என ஆணித்தரமாக அடிக்கடி கூறி வரும் இந்த அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் இவர்களை உள்வாங்கும் என நம்புவது சாத்தியமற்றதே. ஆனால் தேசிய காங்கிரஸைப் பொறுத்த வரை நிலைமை வேறு.இந்தக் கட்சி மாத்திரம்தான் மிக நீண்ட காலமாக ராஜபக்ஷ சகோதரர்களுடன் உறவைப் பேணி வருகின்றது.  

கேள்வி: சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளில் போட்டியிடுவது,சரணாகதி அரசியலென விமர்சிக்கப்படுகிறதே!இது பற்றி உங்கள் கருத்து என்ன? 

பதில்: சிங்களப் பெருந்தேசியம் விழித்துக் கொண்டுள்ள இன்றைய சூழலில்,இவ்வாறான விழிப்பை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது சமயோசித அரசியலேயன்றி,சரணாகதி அரசியலில்லை. இதை தனித்துவ தலைமகள் புரிந்து கொள்வதில்தான் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும் அரசியல் பாதுகாக்கப்படுவது ஆரம்பமாகிறதென்பதே அர்த்தம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவற்றைப் புரிந்து செயற்படுவதில் இன்றுவரைக்கும் முஸ்லிம் தலைமைகள் அசிரத்தையாக உள்ளதுதான் பெரும் கவலையளிக்கிறது.

ஏ.ஜீ.எம்.தௌபீக்


Add new comment

Or log in with...