அச்சம் அடைவதால் எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை

பிரேம் ராவத் (Prem Rawat) அவர்கள், பல நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் 'அமைதியை உணர்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்' என்ற  தொனிப்பொருளில் நேரடியாக உரையாற்றி வருகின்றார். அவரின் உரையிலிருந்து ஒரு சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.       

நான் மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கேள்விகளைப் படிக்கும் போது பலர் இன்றும் இந்த வைரஸை (COVID – 19) பற்றி பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என உணர்கின்றேன். நான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால், பயப்படுவதால் எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் கவலைப்படும் போது உங்களது உடலானது பலவீனமடையத் தொடங்கும். இதனால் மேலும் மேலும் வைரஸின் தாக்கம் அதிகமாகும். ஆகையால் நீங்கள் உங்களினுள்ளே ஆனந்தமாக இருக்க வேண்டும்.

உங்களின் உள்ளே உள்ள ஆனந்தம் எங்கிருந்து வருகின்றது? இந்த சூழ்நிலையில் மனிதன் எவ்வாறு ஆனந்தமாக இருக்க முடியும்? இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், இந்த பதற்றமான சூழ்நிலை வெளியேதான் உள்ளது. உங்கள் உள்ளே அல்ல. உங்களுக்கு இந்த வியாதி வந்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அது உங்கள் மனதில் (இரு காதுகளுக்கிடையில்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

உங்கள் காதுகளை மூடுவதனால் வெளியே ஏற்படும் சத்தங்களை நீங்கள் இலகுவாக நிறுத்தி விடலாம். ஆனால் மனதில் ஏற்படும் சத்தங்களை (குழப்பங்களை) எவ்வாறு நிறுத்த முடியும்?  இதுதான் மிகவும் சிக்கலான விடயமாக உள்ளது.

உங்களின் உள்ளே என்னென்ன சக்திகள் உள்ளன? எந்த சக்திகளை நீங்கள் பாவிக்க முடியும். உங்களிடம் என்னென்ன வல்லமை உள்ளது? உங்களிடம் சகிப்புத்தன்மை உள்ளது. பொறுமை உள்ளது. தெளிவு உள்ளது. எல்லாவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வல்லமை உள்ளது. நம்புவது அல்ல, அறிந்து கொள்ளும் வல்லமை உள்ளது. உங்களின் உள்ளே எல்லாப் படைப்புகளையும் உருவாக்கிய சக்தியும் உண்டு. இதன் அர்த்தம் என்னவெனில் எதுவெல்லாம் உங்களுக்கு தேவையோ, அவையனைத்தும் உங்களிடம் குறைவின்றிக் காணப்படுகின்றன. நீங்கள் எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் இவற்றைப் பாவித்துக் கொள்ள முடியும்.

கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு என்ன கூறுகின்றார்? நான் அதை உங்களுக்குக் கூறுகின்றேன். 'நீ போர் புரி. அதேசமயம் என்னையும் நினைவில் கொள்' எனக் கூறுகின்றார். அதாவது, என்னை உன் உள்ளத்தில் நிலைநிறுத்தி, தியானித்து சமர் செய் என உரைக்கின்றார்.

நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விடயம் யாதெனில், வெளியே என்னதான் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், உங்களின் உள்ளேயும் ஏதோ ஒன்று நடைபெற்று க்கொண்டேதான் இருக்கின்றது. நீங்கள் அதனைப் புரிந்து கொண்டு தியானிப்பது மிகவும் அத்தியாவசியமாகின்றது. இங்கு பகவான் கூறுகின்றார் 'நான் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கின்றேன், என்னை நினைப்பவரிடமும், தியானிப்பவரிடமும் என்றும் நிலைபெற்றிருக்கின்றேன்'.

எவ்வாறு நாம் இறைவனை நினைப்பது? நாம் இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கடவுளின் திருவுருவங்களைப் பார்த்திருக்கின்றோம். சித்திரக் கலைஞன் தன் மனதில் தோன்றியதை, தான் பல நூல்களினூடாகக் கேட்டறிந்த விடயங்களை துணைகொண்டு படங்களாக வரைந்தான். அவன் கடவுளுக்கு இரண்டு கண்கள், மூக்கு, தலைமுடியென பலவற்றைக் கொடுத்தான். மனிதனைப் போலவே உருவமும் கொடுத்தான். அதனால் மக்கள் இறைவனைத் தியானம் செய்யும் பொழுதும் படங்களை, சிலைகளை, உருவங்களை பார்க்கும் பொழுதும் அவை கடவுளின் வடிவம் என எண்ணுகின்றார்கள். ஆனால் யார் ஒருவர் 'காலத்திற்கு' முன்பே இருந்தாரோ, இப்பொழுதும் இருக்கின்றாரோ, எப்பொழுதுமே இருப்பாரோ, மனிதர்கள் தோன்ற முன்பும் அவர் இருந்திருக்கின்றார். இன்று மனிதன் இருக்கின்றான் அவரும் (இறைசக்தி) இருக்கின்றார்.  அவ்வாறாயின் அவரது வடிவம்தான் என்ன? அவருக்கு ஒரு உருவம் ஏன் தேவை? நமக்கு கண்கள், மூக்கு, வாய், காது தேவையாகவுள்ளது. கண்களினால் பார்க்கின்றோம். மூக்கினால் சுவாசிக்கின்றோம், - நுகர்கின்றோம். வாயினால் பேசுகின்றோம், - உணவு உட்கொள்கின்றோம். காதுகளால் கேட்கின்றோம். ஆனால் எங்குமே நிறைந்திருப்பவருக்கு, கேட்டாலும் கேட்காவிட்டாலும் அது பொருட்டல்ல. அது நமக்குத்தான் முக்கியம்.

 இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் நாம் நம்மைப் போல் கடவுளை உருவாக்குகிறோமா?  அல்லது கடவுளின் உண்மையான சொரூபத்தை ஏற்றுக் கொள்கிறோமா? என்பதுதான். கடவுளின் உண்மையான சொரூபத்தை ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனை நம்முள்ளே நாம் உணர வேண்டும். நமது கற்பனையாலோ, எண்ணங்களினாலோ அல்ல.

எம்முள்ளே தோன்றிய எண்ணங்களினாலும், கற்பனைகளினாலும், நாம் உருவாக்கிய படங்களினாலும் அவர் (இறைவன்) அடைக்கப்பட்டு விட்டார். இவ்வாறு அவர் அடைக்கப்பட்டு இருப்பதற்கான அவசியம்தான் என்ன? நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். உண்மையான கடவுள் இங்கிருந்து அங்கோ அல்லது அங்கிருந்து இங்கோ செல்ல முடியாது. ஏனெனில் அவர் எல்லாவிடத்திலும் உள்ளார். இதுதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய விடயமாகும்.

(மிகுதி நாளை)

மேலதிக விபரங்களுக்கு:
www.timelesstoday.tv
www.premrawat.com/engage/
peak-know-yourself
www.youtube.com/channel/
UCeuGHsa94d7tKBrF6h_wfCQ

அமைதி கல்வித் திட்டம்
(Peace Education Program)
www.tprf.org/peace-education-program/
or WhatsApp +94777793140

தொகுப்பு: இ.மனோகரன்


Add new comment

Or log in with...