பெப்ரவரி மின்பட்டியலுக்கு அமைய, மார்ச், ஏப்ரல், மே கட்டணம் அறவிடப்படும்

பெப்ரவரி மின்பட்டியலுக்கு அமைய, மார்ச், ஏப்ரல், மே கட்டணம் அறவிடப்படும்-March-April-May Electricity Bill will be Matched to February

- செலுத்த இரண்டு மாத கால அவகாசம்
- ஏற்கனவே செலுத்தியோர் மீளப் பெறலாம் அல்லது எதிர்கால பட்டியலில் கழிக்கப்படும்

மார்ச், ஏப்ரல், மே மாத மின்சாரப் பட்டியல் கட்டணத்தை, பெப்ரவரி மாத மின்சாரப் பட்டியலுக்கமைய, அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட குறைந்தபட்ச மின்சாரப் பட்டியலுக்கமைய, அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (15) போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சக்தி, எரிசக்தி மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் மஹிந்தா அமரவீர இதனைத் தெரிவித்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின்சார பட்டியல் தொடர்பான பல்வேறு குற்றசாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு பாரிய நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சக்தி, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மின்சாரப் பட்டியல் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் வகையில் அமைச்சரினால் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட்டதோடு, அதில் முன்மொழியப்பட்ட சலுகைகள் தொடர்பில் ஆராய குழுவொன்றையும் அமைச்சர் நியமித்திருந்தார்.

குறித்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை, பெப்ரவரி மாத மின்சாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட கட்டணத்திற்கு அமைய அல்லது அதன் பின்னர் பெறப்பட்ட குறைந்த கட்டணத்தைக் கொண்ட மின்சாரப்பட்டியலுக்கு அமைய பட்டியலை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் பெப்ரவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்சாரப் பட்டியலிலும் பார்க்க மார்ச் பட்டியல் கட்டணம் குறைவாயின், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை அறிவிட, அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பட்டியல்களை செலுத்த இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும், மின்வெட்டு மேற்கொள்ள வேண்டாம் எனவும் இலங்கை மின்சார சபைக்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிவாரணங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலங்கை மின்சார சபைக்கு ரூ. 10 இலட்சத்து 3,000 ரூபாவை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மின்சார சபையினால், நுகர்வோருக்கு இவ்வாறான பாரிய நிவாரணம் இதற்கு முன்னர் ஒருபோதும் வழங்கப்படவில்லை என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கொவிட்-19 காரணமாக, மானி வாசிப்பு சரியாக மேற்கொள்ளப்படாது மற்றும் பட்டியல்கள் தவறாக வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்த அவர், மே மாதம் முதல் மின்மானி வாசிப்பு உரிய முறையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, மேற்கூறிய மூன்று மாதங்களுக்கும் வழங்கப்பட்ட கட்டணப் பட்டியல்களுக்கு ஏற்ப, ஒருவர் ஏற்கனவே கட்டணங்களை செலுத்தியிருந்தால், சம்பந்தப்பட்ட தொகையைப் மீளப் பெற அல்லது எதிர்கால பட்டியல்களில் இருந்து அத்தொகையை கழித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்த்தின் போது, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களிலும், 0 - 90 வரையான அலகுகளைப் பயன்படுத்திய பாவனையாளர்களுக்கு 25% கட்டண கழிவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஆயினும் இச்சலுகையை விட மேலும் சலுகைகளை உள்ளடக்கியதாக எதிர்வரும் அமைச்சரவையில் ஆராய்ந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...