விழிப்புணர்வை ஒருபோதும் அலட்சியம் செய்யலாகாது!

இலங்கையில் கடந்த மார்ச் மாத நடுப் பகுதியில் தீவிரமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் இப்போது மீண்டும் சற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

போதைப் பொருளுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு பொலன்னறுவை மாவட்டத்தின் கந்தக்காடு பகுதியில் இயங்கி வந்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தே தற்போது கொரோனா தொற்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது.போதைப்பொருளுக்கு அடிமையானோர் அந்த முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர்.

இவர்கள் ஊடாகவே கொரோனா தொற்று தற்போது நாட்டில் பலருக்கும் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் இது இன்னுமே சமூகத் தொற்றாக தீவிரம் அடையவில்லை. அதுமாத்திரமன்றி, இலங்கையில் கொரோனா பரவுதலில் மூன்றாவது அலைத் தாக்கம் ஏற்படுவதற்கான ஆபத்து அறிகுறியும் இப்போது தென்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் நம்பிக்ைகயுடன் கூறுகின்றார்கள்.

கந்தக்காடு முகாமில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சிலர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பலருக்கு பரவி இருப்பது உண்மைதான். ஆனாலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்படக் கூடிய அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களை சில வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திருந்து கண்காணிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்ட பலருக்கு உரிய சிகிச்சை வழங்கும் பணிகளும்   ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

அரசாங்கம் இவ்விடயத்தில் மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. எனவே மக்கள் கொரோனா அச்சுறுத்தல் குறித்து வீணான மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. அதேசமயம் கொரோனா தொடர்பாக பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்ற வதந்திகள் குறித்தும் மக்கள் அவசியமற்ற குழப்பம் அடைய வேண்டியதில்லை.

கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாட்டில் தீவிரமடையத் தொடங்கிய கொரோனா தொற்று நிலைமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய நிலைமை பாரதூரமானது அல்ல. அரசாங்கம் இதனை எவ்வாறாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது உறுதியாகும். எனவே கொரோனா கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக செவிசாய்த்து நடந்து கொள்ள வேண்டியதே மக்களின் இன்றைய பொறுப்பாகும்.

கொரோனா  விழிப்புணர்வை மக்கள் இப்போது பெருமளவில் அலட்சியம் செய்வதாக இலங்கையின் சுகாதாரப் பகுதியினரும் மருத்துவ பேராசிரியர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் தணிந்து விட்டதாகவும், சமூகத் தொற்று முற்றாகவே நீங்கி விட்டதாகவும் சுகாதார அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்ததை அடுத்து மக்கள் விழிப்புணர்வு ஏற்பாடுகளை முற்றாகவே அலட்சியப்படுத்தியதை காண முடிந்தது.

கைகளை சவர்க்காரம் இட்டு கழுவிக் கொள்வது, முகக்கவசம் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி பேணுதல் ஆகியவற்றை பலரும் புறக்கணிக்கத் தொடங்கி உள்ளனர். மூக்கு, வாய் ஆகியன வெளியே தெரியும்படியாக, தாடை வரை முகக்கவசத்தை இறக்கி விட்டபடி பலரும் வீதியில் நடமாடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அலட்சியமாக முகக்கவசம் அணிவதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கொரோனா நாட்டில் தீவிரமாகப் பரவிய வேளையில் விழிப்புணர்வைப் பேணிய எமது மக்கள், பின்னர் படிப்படியாக அதனை அலட்சியம் செய்து விட்டதை நன்றாகவே உணரக் கூடியதாக உள்ளது.

இலங்கையின் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிடும் போது, வீதியில் நாடமாடும் மக்களில் பலர் பொலிஸாரை எதிரில் கண்டதும் மாத்திரமே முகக்கவசத்தினால் முகத்தை மூடிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். கொவிட் 19 வைரஸின் ஆபத்தான பரவல் குறித்து இன்னும்தான் மக்கள் மத்தியில் பூரணமான தெளிவு ஏற்படாததையே இந்த அலட்சியம் புலப்படுத்துகிறது.

இன்றைய நிலையில் எமது மக்கள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவுவதை எமது நாடு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுமென்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. அதனை கட்டுப்படுத்திய அனுபவம் இலங்கைக்கு உண்டு.

ஆனால் உலகில் இருந்து கொரோனா பரவலை முற்றாகக் கட்டுப்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. உலகில் இறுதியான கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அதுவரை நாமும் விழிப்புணர்வைத் தொடர்வது அவசியம்.


Add new comment

Or log in with...