அவுஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும்

இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது அங்கு தனிமைப்படுத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் சபை தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபை தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளோம். இதற்காக டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறோம். அங்கு சென்றதும் தனிமைப்படுத்துதல் நடைமுறையாக 2 வாரங்கள் ஹோட்டலிலேயே வெறுமனே முடங்கி இருந்தால் வீரர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள். எனவே தனிமைப்படுத்தும் நடைமுறை காலத்தை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மெல்போர்னை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தனிமைப்படுத்தும் நாட்களை குறைப்பார்கள், சீக்கிரமாகவே கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.

இது நிச்சயம் கடினமான தொடராக இருக்கப்போகிறது. 2 ஆண்டுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2--1 என்ற கணக்கில் நாம் கைப்பற்றினோம். அந்த தொடர் போல் இந்த தொடர் இருக்கப்போவதில்லை. தற்போது அவுஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணியும் நல்ல நிலையில் உள்ளது. நாம் அங்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உலகின் சிறந்த அணிகள் வெளிநாட்டிலும் பேட்டிங்கில் மிரட்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் நாடுகளில் நாம் வெற்றி கண்ட டெஸ்ட் போட்டிகளில் 400, 500, 600 ஓட்டங்கள் வரை குவித்தது உண்டு. இதைத்தான் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியிடம் சொல்லியிருக்கிறேன்.

கோலியின் துடுப்பாட்டம், தலைவரின்  தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. நீங்கள் (கோலி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது, அணியை வெற்றிக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இது அவரது தலைவரை தீர்மானிக்கும் தொடராக இருக்கப்போகிறது. மொத்தத்தில் இது சிறப்பு வாய்ந்த, மைல்கல் தொடராக அமையும்.

கொரோனா பரவலால் நமது வீரர்கள் 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர். தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கோலியிடம் கூறியிருக்கிறேன். அது மட்டுமின்றி முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பந்து வீச்சாளர்களும் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் போது அவர்களது உடல்தகுதி கச்சிதமாக இருக்க வேண்டும்.


Add new comment

Or log in with...