முதல் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1--0 என முன்னிலை அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்ற, மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சௌத்தம்ப்டன் நகரில் கடந்த புதன்கிழமை (8) ஆரம்பமானது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாகவும் அமைகின்ற இந்த டெஸ்ட தொடரின் முதல் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பதில் தலைவர் பென் ஸ்டோக்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் போட்டியின் முதல் நாளில் மழையின் இடையூறு காரணமாக 17.4 ஓவர்களுக்கே துடுப்பாட முடியுமாறு இருந்தது. இதனை அடுத்து, போட்டியின் இரண்டாம் நாளில் தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்த அவர்கள் தமது முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின்  துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்கள் எடுத்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஜொஸ் பட்லர் 35 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவரான ஜேசன் ஹோல்டர் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்து டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்ய, ஷனோன் கேப்ரியல் தனது வேகத்தின் மூலம் 4 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் 318 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், அரைச்சதம் தாண்டிய கிரேக் ப்ராத்வைட் 65 ஓட்டங்களையும், ஷேன் டோவ்ரிச் 61 ஓட்டங்களையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் தமது வேகத்தின் மூலம் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்டுக்களையும் சுருட்ட, டொம் பெஸ் 2 விக்கெட்டுக்களை தனது சுழல் மூலம் கைப்பற்றியிருந்தார்.

114 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் 313 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் ஸக் கிராவ்லி தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 76 ஓட்டங்கள் பெற, டொமினிக் சிப்லி அரைச்சதத்துடன் 50 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் இம்முறையும் அசத்தலாக செயற்பட்ட ஷனோன் கேப்ரியல் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ரொஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 200 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்சுக்காக பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி குறித்த வெற்றி இலக்கினை 67.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களுடன் அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த ஜெர்மைன் ப்ளாக்வூட் தனது 2ஆவது டெஸ்ட் சதத்தினை இப்போட்டியில் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், ரொஸ்டன் சேஸ் 37 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜொப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்ட போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 40 புள்ளிகளை ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பெற்றுக்கொள்கின்றது. அதேநேரம், டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...