வேகமாகத் தணிந்து சென்ற வேளையில் மீண்டும் தீவிரமடைந்த கொரோனா பரவல் | தினகரன்


வேகமாகத் தணிந்து சென்ற வேளையில் மீண்டும் தீவிரமடைந்த கொரோனா பரவல்

உலகிற்கே பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட் - 19 தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டு நிலையை அண்மித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் முதன் முறையாக ஒரே நாளில் 300 பேர் இவ்வைரஸ் தொற்றாளர்களாக நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இவ்வளவு தொகையினர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்தது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கியுள்ள 283 பேரும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 09 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய 03 பேரும், பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் ஒருவரும் என்றபடி இவ்வளவு தொகையினர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இந்நாட்டில் கொரோனா பதிவாகத் தொடங்கியது முதல் ஜுலை 10 ஆம் திகதி வரை  அதிகூடிய எண்ணிக்கையானோர் பதிவானது இதுவே முதலாவது தடவையாகும். ஆனால் இதற்கு முன்னர் அதிகூடிய எண்ணிக்கையானோராக மே மாதம் 27 ஆம் திகதி 150 பேர் இனம் காணப்பட்டனர். அவர்களில் 92 பேர் குவைத் நாட்டிலிருந்தும், 05 பேர் சென்னையிலிருந்தும் நாடு திரும்பியவர்களாவர். 53 பேர் கடற்படையினராவர். இவர்கள் அனைவரும் கொவிட் - 19 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

  ஜுலை 10 இல் கொரோனா தொற்றாளர்களாக அதிகூடிய எண்ணிக்கையானோர் இந்நாட்டில் அடையாளம் காணப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பதற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கான முன்அறிகுறியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 இவ்வாறான நிலையில் கொரோனா தவிர்ப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவிந்திர சில்வா, 'கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக ஏற்பட்டிருக்கும் நிலைமை கவலையளித்துள்ள போதிலும், அதனை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, 'சுதுவெல்லவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் ஒருவரால்தான் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது கடற்படையினருக்கு ஏற்பட்டது போன்ற ஒரு நிலை. இது சமூக பரவலாவதைத் தவிர்க்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை உச்சளவில் பேண வேண்டும்' என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்,  கொரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டிருப்பதால் சமூக மட்டத்தில் பி.சீ.ஆர் பரிசோதனையை உடனடியாக ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

'இவ்வைரஸ் சமூகத்தில் பரவாமல் தவிர்ப்பதற்கான சகல தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர் தீபா கமகே தெரிவித்திருக்கின்றார்.

அந்த அடிப்படையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றுபவர்களில் விடுமுறையில் வீடு திரும்பியுள்ளவர்களை உடனடியாக பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் அம்முகாமில்  புனர்வாழ்வு பெறுபவர்களை சந்திக்கச் சென்று திரும்பியுள்ளவர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

சீனாவின் உஹான் நகரில் 2019 டிசம்பர் பிற்பகுதியில் தோற்றம் பெற்று பதிவாகத் தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாகப் பரவியது.  முதல் மூன்று மாதகாலப்பகுதிக்குள் உலகிலுள்ள அத்தனை கண்டங்களையும் சென்றடைந்த இவ்வைரஸ், ஆறு மாத காலப் பகுதிக்குள் ஒரு கோடி 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்திருக்கின்றது. ஐந்து இலட்சத்து இருபதாயிரம் பேரின் உயிரிழப்புக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது. ஆனாலும் 72 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

என்றாலும் சீனாவில் தோற்றம் பெற்று அயல்நாடுகளில் பரவத் தொடங்கிய இவ்வைரஸ் இலங்கைக்கும் விரைவாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் இவ்வைரஸ் இந்நாட்டுக்குள் வந்தடைவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்தது.இவ்வாறான நிலையில் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனம் காணப்பட்டார்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...