நீதிமன்றத்தில் கைதிகளை முன்னிலைப்படுத்தல் இடைநிறுத்தம்

நீதிமன்றத்தில் கைதிகளை முன்னிலைப்படுத்தல் இடைநிறுத்தம்-Producing Inmates to the Court Suspended-Prison Commissioner

அவசர வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்குகள் தொடர்பில், கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தந்த நீதிமன்றங்களினால் வழங்கப்பட்டுள்ள அறிவிப்புக்கமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விளக்கமறியல் நீடிப்பு உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற கைதி ஒருவரை, வழக்கொன்று தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வந்த நிலையில் ​​அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் 2,078ஆவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபரைத் தொடர்ந்து அவருடன் தொடர்புபட்ட மற்றொரு கைதியும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை கந்தாக்காடு சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஊடாக 519 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறுஅறிவித்தல் வரை, சிறைச்சாலைகளுக்கிடையில் கைதிகளை பரிமாறுவதும் இடைநிறுத்தப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.


Add new comment

Or log in with...