சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்த வழக்கு கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் ​கோரிக்கை

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மீள் பரிசீலனையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராயவேண்டியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.  

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள முறையானது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என குற்றஞ்சாட்டி அரச மருத்துவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகியோரின் முன்னிலையிலேயே நேற்று இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.  

இலங்கை சிங்கப்பூருக்கிடையிலான மேற்படி சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுதொடர்ந்தும் அதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.  

அண்மைக்காலங்களில் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக அதுதொடர்பில் ஆராயும் செயற்பாடுகள் காலதாமதமாகியதாக தெரிவித்துள்ள சட்டமா அதிபர், அந்த செயற்பாடுகளை நிறைவுசெய்வதற்கான மேலதிக காலத்தைப் பெற்றுத்தருமாறு அவர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Add new comment

Or log in with...