முன்னிலை பெற்றது இங்கிலாந்து சிப்லே, கிராலே அரைசதம் | தினகரன்


முன்னிலை பெற்றது இங்கிலாந்து சிப்லே, கிராலே அரைசதம்

மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டாம் சிப்லே, ஜாக் கிராலே அரைசதமடித்து கைகொடுக்க 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.கொரோனா காரணமாக தடை பட்ட கிரிக்கெட் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவு அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204, மேற்கிந்திய தீவுக்கு 318 ஓட்டங்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (10), சிப்லே (5) அவுட்டாகாமல் இருந்தனர்

சிப்லே அரைசதம்:

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே ஜோடி நிதானமாக விளையாடியது. ஷனான் கேப்ரியல் வீசிய 16வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்ன்ஸ், கீமர் ரோச், ஜேசன் ஹோல்டர் ஆகியோரது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் சேர்த்த போது ராஸ்டன் சேஸ் சுழலில் பர்ன்ஸ் (42) சிக்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய சிப்லே, அரைசதமடித்தார். இவர், 50 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார்.

கிராலே அபாரம்:

அடுத்து வந்த ஜோ டென்லி (29), ராஸ்டன் சேஸ் பந்தில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஜாக் கிராலே தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இவருக்கு தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் சேர்த்த போது ஸ்டோக்ஸ் (46) ஆட்டமிழந்தார். ஜோசப் பந்தில் கிராலே (76) சரணடைந்தார்.தேநீர் இடைவேளைக்கு பின், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 253 ஓட்டங்கள் எடுத்து, 139 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. பட்லர் (4), போப் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவு சார்பில் சேஸ் 2, கேப்ரியல், ஹோல்டர், ஜோசப் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

150 விக்கெட்

முதல் இன்னிங்சில் வேகத்தில் அசத்திய இங்கிலாந்து அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ், 14 ஓவரில், 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 150வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை இவர், 64 டெஸ்டில், 151 விக்கெட் சாய்த்துள்ளார். தவிர இவர், துடுப்பாட்டத்தில் 4,099 ஓட்டங்கள் (9 சதம், 21 அரைசதம்) குவித்துள்ளார். இதனையடுத்து டெஸ்ட் வரலாற்றில் 4,000 ஓட்டங்கள் மற்றும் 150 விக்கெட் கைப்பற்றிய சகலதுறை வீரர் பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே மேற்கிந்திய தீவின் கேரி சோபர்ஸ் (8,032 ஓட்டங்கள் மற்றும் 235 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (5,248 ஓட்டங்கள் மற்றும் 434 விக்கெட்), தென் ஆபிரிக்காவின் கலிஸ் (13,289 ஓட்டங்கள் மற்றும் 292 விக்கெட்), நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (4,531 ஓட்டங்கள் மற்றும் 362 விக்கெட்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

அண்டர்சன் ஆதரவு

பிராட் நீக்கம் குறித்து சக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் கூறுகையில்,முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டதால் விரத்தி, ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால், இவரை நீக்கியதால் அணியின் பந்துவீச்சு பலத்தை அறிய முடிந்தது என்றார்.


Add new comment

Or log in with...