விமான நிலைய திறப்பு ஒத்திவைப்பதற்கான சாத்தியம்

- வெளிநாட்டிலுள்ளோர் அழைத்து வருவது இடைநிறுத்தம்

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பெரும்பாலும் ஒத்தி வைக்கப்படுமென, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

பியகமவில் நேற்று (12)  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதியளவான தங்குமிட வசதி இன்மையால், நாளை (14) முதல் அமுலுக்கு வரும் வகையில்,  வெளிநாட்டில் பணி புரிபவர்களை திருப்பி அழைத்து வருவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

நாளை (14) முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருவதாகவும், வழமையான நிலைமைக்கு வந்தவுடன் இது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணி புரிபவர்கள் சுமார் 12,000 பேர் இதுவரையில் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கை பணியாளர்களையும் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமெனவும், அமைச்சர் உறுதியளித்தார்.


Add new comment

Or log in with...