வெற்றி பெறாத இலக்கை நோக்கி தமிழினம் பயணம் செய்யக் கூடாது | தினகரன்


வெற்றி பெறாத இலக்கை நோக்கி தமிழினம் பயணம் செய்யக் கூடாது

"மக்களுக்கு சேவை செய்து விட்டு த்தான் நான் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். ஆகவே நிச்சயமாக யாழ் மக்கள் என்னுடைய வெற்றிக்கு பங்களிப்பு நல்குவார்கள். நாங்கள் மூன்று பிரதிநிதித்துவங்களை யாழ் மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்வோம்" என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மை வேட்பாளரும், சிவன் பவுண்டேசன் அமைப்பின் இயக்குனருமான கணேஸ்வரன் வேலாயுதம் தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்

கேள்வி: நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டா? 

பதில்: 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். சுயேச்சையாக நின்று 1460 வாக்குகள் பெற்றேன். அன்றில் இருந்து இன்று வரை இந்த மக்களை விட்டுவெளியே செல்லாமல் தொடர்ந்து மக்களுடைய குறைநிறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன். அந்த வகையில் மக்களுக்கு நன்கு தெரியும் யார் உண்மைக்கு உண்மையாக வேலை செய்கிறார்கள் என்று. கடைசி நேரத்தில் வந்து எதிர்ப்புவாத அரசியலைப் பேசி வாக்குகள் பெற்றுக் கொள்ளும் செயலை நான் செய்யவில்லை. ஆகவே நிச்சயமாக மக்கள் எங்களுடைய வெற்றிக்கு பங்களிப்பு நல்குவார்கள் என்று கருதுகின்றேன். 

கேள்வி: நீங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் என்ன? 

பதில்: கடந்த கடந்த ஐந்து வருடங்களாக சுமார் ஐந்து கோடி ரூபா பொதுமக்களின் தேவைக்காக செலவு செய்துள்ளேன். இதில் சுமார் ரூபாய் 30 இலட்சம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற அன்பளிப்புப் பணமாகும். மிகுதிப் பணம் என்னுடை சொந்த நிதியாகும். பின்தங்கிய கிராமங்களில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவரின் கல்வி மேம்பாட்டுக்காக பிரத்தியேகமான மாலை நேர வகுப்புக்கள் ஏற்பாடு செய்தோம். மெல்லக் கற்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்காகவும் பிரத்தியேக வகுப்புக்கள் செய்தோம்.

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நன்மை அடைந்தார்கள். விளையாட்டுத் துறையில் திறமை காட்டி வரும் வீர வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் பல செய்து வருகின்றோம். சத்துணவுக்காக நிதி உதவிகள், பிரயாணச் செலவு, பயிற்றுவிப்பதற்கான உதவிகள் எனப் பல தரப்பட்ட உதவிகள் செய்துள்ளேன்.

கல்விக்காகவும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் எத்தனையோ விதமான மனிதாபிமான உதவிகள் செய்துள்ளேன். என்னுடைய முகப்புத்தகத்திற்குச் சென்று ஆராய்ந்து பார்த்தால் அத்தாட்சி ஆதாரங்களுடன் அறிந்து கொள்ளலாம். 

கேள்வி: நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன? 

பதில்: கடந்த 70 வருடங்களாக எமது தமிழ்த் தலைமைகள் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத அரசியலைப் பேசிக் கொண்டு தங்கள் குடும்பத்துக்குத் தேவையான சகல சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்று எமது தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் 16 வயதில் தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவன். அந்தப் போராட்டம் சரியான பாதையில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நாட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். இன்று எனக்கு வயது 52 ஆகும். தமிழ் மக்களுக்கு எதிராக அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமலும் அம்மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் நான் அரசியலில் பிரவேசித்தேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மாதாந்தம் வழங்கப்படும் சம்பளத்தையோ வாகனங்கள் பெறுவதற்காக வழங்கப்படும் சலுகைகளையோ எவற்றையும் பெறப் போவதில்லை. அவற்றை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து மக்களின் தேவை நிறைவு செய்வேன்.  

கேள்வி: தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் முன்வைக்கின்ற கருத்துகள் எவை? 

பதில்: நாங்கள் விடுதலைப் போராட்டம் செய்திருக்கிறோம். ஆயுதப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். வெற்றி பெற முடியாத பாதையில் இன்னும் பயணிக்க வேண்டும் என்று கூறுவது அர்த்தமில்லாதது. நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் கல்வி பொருளாதார ரீதியில் முன்செல்ல வேண்டும். சர்வதேச நாடுகள் உதவும் என்று கூறுகிறார்கள். ஒரு பெரும்பான்மையை எதிர்த்து ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக சர்வதேசம் சமூகம் ஒத்துழைக்கும் என்பது நம்ப முடியாத காரியமாகும். எங்கள் நிலப்பரப்பில் எண்ணெய் வளம், தங்கம் இருக்குமாயின் சர்வதேச சமூகம் உதவ முன்வரும். ஆனால் எங்களுடைய நிலப் பரப்பில் அப்படியான வளங்கள் எவையும் இல்லை. பொருளாதார ரீதியாக முன்னுக்கு வருவோமாயின் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள முடியும் எனக் கருதுகிறேன். 

எமது சிவன் பவுண்டேசன் அமைப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்காக பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.விளையாட்டுத் துறையை மேம்படுத்தல், கல்வி நடவடிக்கையை முன்னெடுத்தல், மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றி வைத்தல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் மேலும் அதிகளவிலான மக்கள் பணிகள் செய்யலாம் எனக் கருதி அரசியலில் ஈடுபாடு காட்டி வருகின்றேன். இத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் என்னுடைய தலைமையில் முன்னணிமிக்க தலைசிறந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.மக்கள் ஆதரவு தருவர் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.  

சஜித் பிரேமதாச அரசியல் அனுபவமிக்கவர். தமிழ் மக்களின் துன்ப துயரங்களை நன்கறிந்தவர். அவருடைய அணுகுமுறைகள், செயற்பாடுகள் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புமிக்கதாக உள்ளன. கட்சி வேறுபாடுகளை மறந்து அவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயமான தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம்.  

கேள்வி: உங்கள் குறிக்கோள் என்ன? 

பதில்: என்னுடைய அரசியல் பயணம் வெறுமனே தமிழ் மக்களின் விடுதலைக்கானது அல்ல. அபிவிருத்தியிலும் கல்வியின் மேம்பாட்டிலும் முன்னோக்கிச் செல்வதற்கான அரசியல் என்னுடையது. இந்த சேவையை கருத்திற் கொண்டு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும். விசேட தேவையுடைய பிள்ளைகளின் நலன் கருதி அவர்களுடைய மருத்துவ சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன். நான் கடந்த 5 வருடங்கள் என்னுடைய சொந்த நிதியில் மக்களுடைய பிரச்சினைகளை இனங் கண்டு தீர்த்துக் கொடுத்துள்ளேன். நான் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ஒரு மாத காலம் கூட அங்கு இருக்கவில்லை. இங்கு வந்து தொடர்ந்து மக்களுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  

நேர்காணல்: இக்பால் அலி 


Add new comment

Or log in with...